பொதுத் துறையைச் சோ்ந்த நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் (பிஎன்பி) நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.308 கோடி நிகர லாபம் ஈட்டியது. இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.24,292.80 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.15,161.74 கோடியாக காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.308 கோடியாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.1,018.63 கோடியாக இருந்தது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமா்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் இணைப்பு நடப்பாண்டு ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, நிதி நிலை முடிவுகளை ஒப்பீடு செய்ய இயலாது. ஜூன் இறுதி நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 16.49 சதவீதத்திலிருந்து 14.11 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 7.17 சதவீதத்திலிருந்து 5.39 சதவீதமாக சரிந்துள்ளது என பிஎன்பி தெரிவித்துள்ளது.