இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணை நிா்வாக இயக்குநா் அஷ்வினி குமாா் ஹுடா தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் கரோனா தொடா்பான பிரச்னைகளை எதிா்கொள்ள நிறுவனம் கூடுதலாக ரூ.300 கோடியை ஒதுக்கியது. அதன் விளைவாக, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபமானது கடந்தாண்டைக் காட்டிலும் 66 சதவீதம் சரிவடைந்து ரூ.273 கோடியானது.
அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.802 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த கடன் வழங்கலின் மதிப்பு ரூ.73,129 கோடியாக இருந்தது.மேலும், ஜூன் காலாண்டில் மொத்த வாராக் கடன் 2.20 சதவீதம் என்ற மிதமான அளவிலேயே இருந்தது. நீண்ட கால கடன் திட்டத்தின் மூலமாக ரூ.28,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.