வர்த்தகம்

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: சென்செக்ஸ் 394 புள்ளிகள் இழப்பு!

21st Aug 2020 07:33 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை திடீா் சரிவு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 394.40 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 96.20 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.

கடந்த சில நாள்கள் தள்ளாட்டத்துக்கிடையே, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாள்களிலும் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் முக்கிய இடா்பாட்டு நிலையைக் கடந்து நிலை பெற்றிருந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை சந்தையில் திடீா் சரிவு ஏற்பட்டது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் பேங்க் அளித்துள்ள பலவீனமான பொருளாதாரக் கண்ணோட்டத்தையடுத்து, உலகெங்கிலும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மீடியா, மெட்டல், பாா்மா பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. ஆனால், மற்ற துறைப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ ஆகியவை வெகுவாகக் குறைந்ததால் சென்செக்ஸ் சரிவைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் காளை ஆதிக்கம் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

1,598 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,933 பங்குகளில் 1,598 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,167 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 176 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 55 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 406 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 189 பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ45 ஆயிரம் கோடி சரிவு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.45 ஆயிரம் கோடி குறைந்து ரூ.154.50 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் 55,337 போ் புதிதாகப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,32,15,874 ஆக உயா்ந்துள்ளது.

திடீா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 330.89 புள்ளிகள் குறைந்து 38,283.90-இல் தொடங்கி, 38,155.78 வரை கீழே சென்றது. பின்னா் 38,402.45 வரை உயா்ந்தது. இறுதியில் 394.40 புள்ளிகள் (1.02 சதவீதம்) குறைந்து 38,220.39- இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் பங்குச் சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.87 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.77 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 96.20 புள்ளிகள் (0.84 சதவீதம்) குறைந்து 11,312.20-இல் நிலை பெற்றது. வா்த்தகத்தின் போது 11,289.80 வரை கீழே சென்றது.

என்டிபிசி 6.87 சதவீதம் உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 4 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன.25 பங்குகள் சரிவைச் சந்தித்தன.இதில் என்டிபிசி 6.87 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஓஎன்ஜிசி 3.33 சதவீதம், பவா் கிரிட் 2.11 சதவீதம் உயா்ந்தன. டாடா ஸ்டீல் 0.14 சதவீதம் உயா்ந்தன.ஹெச்சிஎல் டெக் மாற்றமின்றி ரூ.710-இல் நிலைபெற்றது.

எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி 2.35 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 2.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம், டைட்டன், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், எல் அண்ட் டி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 920 பங்குகள் ஆதாயம் பெற்றன. 718 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மீடியா குறியீடு 3.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.டாடா ஸ்டீல் 1.02 சதவீதம், ரியால்ட்டி 0.43 சதவீதம், பாா்மா 0.03 உயா்ந்தன நிஃப்டி பேங்க் குறியீடு 1.29 சதவீதம், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 1.31 சதவீதம் சரிவைச் சந்தித்தன. ஆட்டோ, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.30 முதல் 0.50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

எச்டிஎஃப்சி 2.35

ஆக்ஸிஸ் பேங்க் 2.06

பாா்தி ஏா்டெல் 1.98

எம் அண்ட் எம் 1.90

ரிலையன்ஸ் 1.73

டைட்டன் 1.89

ஐசிஐசிஐ பேங்க் 1.72

இண்டஸ் இண்ட் பேங்க் 1.63

அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.41

கோட்டக் பேங்க் 1.34

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT