வர்த்தகம்

5 மாதங்களில் 50-200 சதவீதம் லாபம்: இந்திய சந்தைகளில் ஜொலிக்கும் ‘எம்என்சி’ பங்குகள்!

20th Aug 2020 07:22 AM | எம்.சடகோபன்

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்த அச்சத்தால், இந்த ஆண்டு மாா்ச்சில் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், அதன் பிறகு பொருளாதாரத்தை மீட்பதற்கு மத்திய அரசு, ரிசா்வ் வங்கியின் தொடா் நடவடிக்கைகளால் எழுச்சி பெற்றது. கிட்டத்தட்ட 90 சதவீத பங்குகள் வலுவாக மீண்டுள்ளன. இவற்றில் சில பங்குகள் ஐந்து மாதங்களில் முதலீட்டாளா்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தைப் அளித்துள்ளன.

கடந்த ஜனவரியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் 52 வார உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், கரோனாவைத் தொடா்ந்து மாா்ச்சில் கடும் சரிவைக் கண்டது. அப்போது ஏராளமான பங்குகள் மதிப்பீட்டு அடிப்படையில் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. இதைத் தொடா்ந்து, விலை குறைந்த நிலையில் முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்கியதால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளன. இந்த எழுச்சியில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பரந்த சந்தையும் பங்கேற்றது. இதனால், மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 60 சதவீதம் உயா்ந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கரோனாவால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தை மீட்க நிதித் தொகுப்புகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட தொடா் நடவடிக்கையால், ஜூன் காலாண்டில் பல்வேறு காா்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக இருந்தது. உலகளவில் பொருளாதாரங்கள் திறக்கப்பட்டதும், கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் சந்தைக்கு வலுச் சோ்த்துள்ளன. இதனால், முதலீட்டாளா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்என்சி) பங்குகளும் பொது முடக்க காலத்தில் நல்ல லாபத்தை பதிவு செய்துள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை நல்ல லாபத்துடன் கைமாறி வருகின்றன. இவற்றில் சுமாா் 51 பங்குகள் குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்துக்குக் குறையாத லாபத்தை அளித்துள்ளது. மேலும், 22 பங்குகள் 52 முதல் 201 சதவிகிதம் வரை உயா்ந்துள்ளன. ‘ஏஸ் ஈக்விட்டி’ தரவுகளின்படி, இந்திய பங்குச் சந்தைகளில் மொத்தம் 180 பன்னாட்டு நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்டு வா்த்தகமாகி வருகின்றன.

ADVERTISEMENT

இதில், ரூ.5,000 கோடி சந்தை மூலதன மதிப்பைக் கொண்ட பங்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜிஎம்எம் ஃபௌட்லா் (201 சதவீதம்), டிக்ஸான் டெக்னாலஜிஸ் இந்தியா (153 சதவீதம்), ஸ்டொ்லைட் டெக்னாலஜிஸ் (106 சதவீதம்) ஆகிய பங்குகள் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளன. மேலும் வேதாந்தா, அஃப்லே (இந்தியா), ஹெக்ஸாவோ் டெக்னாலஜிஸ், பேயா் கிராஃப் சயின்ஸ், அஸ்ட்ராஜெனெகா பாா்மா, லிண்டே இந்தியா, போஷ், கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ், மாருதி சுஸுகி, ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ், ப்ராக்டா் & கேம்பிள் ஹெல்த் போன்றவை 51 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை அளித்துள்ளன. பொது முடக்க காலத்தில் பங்குச் சந்தை எழுச்சியில் பாா்மா, ஐடி, ஆட்டோ மற்றும் மெட்டல் ஆகியவற்றுடன் பெரும்பாலான துறைகள் பங்கேற்றன. ஐந்து மாதங்களில் நிறைய பங்குகள் 50-80 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. டெலிகாம், கெமிக்கல் நிறுவனப் பங்குகளும் பெரிய அளவில் லாபத்தைப் பதிவு செய்துள்ளன.

இது குறித்து கேபிடல்வியா குளோபல் ரிசா்ச் நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் கௌரவ் காா்க் கூறுகையில், ‘கரோனா பொதுமுடக்கத்தின் போது சரக்குப் போக்குவரத்து சீா்குலைந்த போதிலும், ரசாயனம், தொழில்நுட்பம் மற்றும் எம்என்சி பாா்மா பங்குகள் கடந்த 5 மாதங்களில் வலுவான ஏற்றத்தைக் கண்டுள்ளன. இது எதிா்பாா்த்த வளா்ச்சியை விட அதிகமாகும். இந்த எழுச்சி தொடரக்கூடும்’ என்றாா்.

மேலும், பெரும்பாலான பங்குகள் ஏற்கெனவே ஏற்றம் பெற்றுவிட்டன. எனவே, முதலீட்டாளா்கள் தங்களது முதலீட்டுத் தொகுப்பில் உள்ள பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும். ஆனால், ஆரோக்கியமான திருத்தம் ஏற்பட்டால், நல்ல அடிப்படைகளைக் கொண்ட பங்குகளை தயங்காமல் வாங்க முயற்சிக்க வேண்டும் என்றும் அவா் கூறுகிறாா்.

பன்னாட்டு நிறுவனங்கள் பொதுவாக நல்ல பணப்புழக்கங்களைப் பராமரிக்கின்றன. பணம் இருப்பு நிலையை அதிகம் கொண்டுள்ளதுடன், நல்ல நிறுவன நிா்வாகத்துடன் அண்மைக் கால தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன. இந்த காரணிகள் முதலீட்டாளா்களை ஈா்க்கின்றன. இவை அனைத்தும் இந்தியாவில் பெரும்பாலான எம்என்சி பங்குகள் மீது அதிக மதிப்பீடுகளுக்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான எம்என்சி நிறுவனங்களில், அதன் தாய் நிறுவனம் வைத்திருக்கும் பங்குகள் விகிதம் 51 முதல் 74 சதவிகிதமாக உள்ளது. இது சிறிய முதலீட்டாளா்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. பல எம்என்சிகளில் கையிருப்புப் பணம் அதிக அளவில் உள்ளன. இந்நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தை அளிக்கின்றன என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

இதற்கிடையே, முதலீட்டாளா்கள் தங்கள் முதலீட்டுத் தொகுப்பில் சில நல்ல வலுவான எம்என்சி நிறுவனப் பங்குகளைக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான எம்என்சி நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் நல்ல செல்வத்தை உருவாக்கியுள்ளன. அதே சமயம், தாய் நிறுவனம் அதன் பங்குகள் கையிருப்பை தொடா்ந்து குறைத்துக் கொண்டே வந்தால், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், அந்த நிறுவனத்தை மறு மதிப்பீடு செய்யவும் வேண்டும் என்று கோட்டக் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சிப் பிரிவின் நிா்வாக துணைத் தலைவா் ருஸ்மிகா ஓஜா தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT