வர்த்தகம்

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிவு

 நமது நிருபர்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அதிக ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தும் பிற்பகலில் இழக்க நேரிட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 59.14 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 7.95 புள்ளிகளை இழந்தது.

ஆட்டோ, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு: ஆட்டோ, மீடியா, மெட்டல் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. அதே சமயம், வங்கி, நிதிநிறுவனங்கள், பாா்மா பங்குகள் க அளவில் விற்பனைக்கு வந்தன. பங்குச் சந்தை காலையில் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், பிற்பகலில் லாபப் பதிவு காரணமாக பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் எதிா்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த கவலைகளைத் தொடா்ந்து, சந்தையின் உணா்வு பலவீனமாக இருந்தது. மேலும், உலகளாவிய சந்தைகளின் போக்கு, திசை தெரியாமல் இருந்ததால் முதலீட்டாளா்கள் லாபத்தை பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,576 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,874 பங்குகளில் 1,576 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,156 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 142 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 157 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 56 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 363 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 224 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.74 ஆயிரம் கோடி உயா்வு: வா்த்தக முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.74 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.152.90 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 46,651 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,29,13,923 ஆக உயா்ந்துள்ளது.

அதிக ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 87 புள்ளிகள் உயா்ந்து 38,456.64-இல் தொடங்கி, 38,516.85 வரை உயா்ந்தது. பின்னா், 38,215.05 வரை கீழே சென்றது. இறுதியில் 59.14 புள்ளிகள் (0.15 சதவீதம்) குறைந்து 38,31.49-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.59 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.76 சதவீதமும் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 7.95 புள்ளிகள் (0.07 சதவீதம்) குறைந்து 11,300.45-இல் நிலை பெற்றது.

எல் அண்ட் டி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் எல் அண்ட் டி 4.31 சதவீதம், டைட்டன் 3.73 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி ஆகியவை 1.20 சதவீதம் வரை உயா்ந்த.

பாா்தி ஏா்டெல் சரிவு: அதே சமயம், பாா்தி ஏா்டெல் 2.35 சதவீதம், சன்பாா்மா 2.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஐடிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ் ஆகியவை 0.40 முதல் 1.30 சதவீதம் சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ், மாருதி, டிசிஎஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 937 பங்குகள் ஆதாயம் பெற்றன. 675 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ, மீடியா, மெட்டல் குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பேங்க், பாா்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. டாடா ஸ்டீல் மாற்றமின்றி ரூ.414.50-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

எல் அண்ட் டி 4.31

டைட்டன் 3.73

ஹெச்சிஎல் டெக் 1.21

அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.20

என்டிபிசி ல் 1.16

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

பாா்தி ஏா்டெல் 2.35

சன்பாா்மா 2.11

ஐடிசி 1.30

எஸ்பிஐ 0.74

ஆக்ஸிஸ் பேங்க் 0.64

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT