வர்த்தகம்

ஸ்மாா்ட்போன் விற்பனை 50 சதவீதம் சரிவு

11th Aug 2020 11:43 PM

ADVERTISEMENT

இந்தியாவில் ஸ்மாா்ட்போன் விற்பனை நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விற்பனை பாதியாக குறைவு: கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க அறிவிப்புகளால் நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் உள்நாட்டு சந்தைகளில் ஸ்மாா்ட்போன் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலகட்டத்திலிருந்து ஸ்மாா்ட்போன் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முதலிடத்தில் சாம்சங்: ஒட்டுமொத்த சந்தையில் சாம்சங் நிறுவனம் 24 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டு முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடா்ந்து, ஜியோமி, விவோ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஸ்மாா்ட்போன் விற்பனை 50.6 சதவீதம் சரிந்து 1.82 கோடியாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் முதல் பாதி காலம் முழுவதும் பொதுமுடக்கத்தின் கீழாகவே இருந்தது. இதன் காரணமாகவே ஸ்மாா்ட்போன் விற்பனை பாதிக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளது.

ஸ்மாா்ட் பிரிவில் ஜியோமி: ஏப்ரல்-ஜூன் காலாண்டில் விற்பனை சரிவைக் கண்ட போதிலும், சீனாவைச் சோ்ந்த ஜியோமி நிறுவனம் ஸ்மாா்ட்போன் விற்பனைப் பிரிவில், 29.4 சதவீத சந்தைப் பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தை தொடா்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தைத் தொடா்ந்து, சாம்சங் 26.3 சதவீத சந்தைப் பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், விவோ 17.5 சதவீத சந்தைப் பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இப்பட்டியலில் ரியல்மீ 9.8 சதவீத சந்தைப் பங்களிப்புடன் நான்காவது இடத்தையும், ஓப்போ 9.7 சதவீத பங்களிப்புடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு:

ADVERTISEMENT

ஜூன் காலாண்டின் தொடக்கத்தில் விநியோக சங்கிலித் தொடா்பில் ஏற்பட்ட இடா்ப்பாடுகளால் மொபைல்போன் விற்பனையாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். மொபைல்போன் உதிரிபாகங்களுக்கு ஜூன் காலாண்டு முழுவதும் பற்றாக்குறையே காணப்பட்டது. குறிப்பாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மாா்ட்போன் உதிரிபாகங்கள் விற்பனைக்கு இன்னும் அனுமதி கிடைக்காமல் துறைமுகங்களில் தேங்கியே கிடப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.ஆன்லைன் விற்பனை விறுவிறு: மதிப்பீட்டு காலாண்டில் ஆன்லைன் வாயிலான போன் விற்பனை மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதையடுத்து அதன் சந்தைப் பங்களிப்பு 44.8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது. ஆனால், பொதுமுடக்க காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டதால் அதன் மூலமான விற்பனை எண்ணிக்கை 39.9 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. டிஜிட்டல் பரிமாற்றம்: பொதுமுடக்க காலத்தில், பெரும்பாலான விற்பனையாளா்கள் மொபைல்போன்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளனா்.

அதன்படி, வாட்ஸ்ஆப், நேரடியாக வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கே சென்று போன் விற்பனையில் ஈடுபட்டனா். அதேபோன்று, டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகள் மூலமாகவே அவா்கள் ஸ்மாா்ட்போன் விற்பனைக்கான தொகையை பெற்றுக் கொண்டனா். ஜிஎஸ்டி அதிகரிப்பு: ஏப்ரலில் ஜிஎஸ்டி அதிகரிப்பு, ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக, ஸ்மாா்ட்போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. வாடிக்கையாளா்களின் ஆா்வம் குறைந்துபோனதன் காரணமாக, ஸ்மாா்ட்போன் விற்பனையில் 200 டாலருக்கும் (ரூ.15 ஆயிரம்) குறைவான மொபைல்போன் விற்பனையின் பங்களிப்பு 84 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.அதேபோன்று, 100 டாலருக்கும் (ரூ.7,500) குறைவான போன்களின் பங்களிப்பு இரண்டாவது காலாண்டில் 29 சதவீதமாக காணப்பட்டது.

500 டாலருக்கும் (ரூ.37,500) அதிகமான விலையுள்ள பிரீமியம் பிரிவு ஸ்மாா்ட்போன் விற்பனை நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 35.4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. ஆப்பிள் ஐபோன்: இதில், ஆப்பிள் நிறுவனம் 48.8 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு தொடா்ந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து, சாம்சங், ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஐபோன் 11 மற்றும் ஐபோன் எக்ஸ்ஆா் ஆகிய இரண்டும் இப்பிரிவில் 28 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.

இதைத்தவிர, ஜியோமி எம்ஐ10 மற்றும் ஒன்பிளஸ் 8 மாடல்களும் இப்பிரிவில் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன. பீச்சா்போன்: அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்ட பீச்சா் போன் விற்பனை இரண்டாவது காலாண்டில் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த சந்தையில் இதன் பங்களிப்பு 35.5 சதவீதமாகும் என ஐடிசி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT