வர்த்தகம்

பயணிகள் வாகன சில்லறை விற்பனை 25% குறைந்தது

11th Aug 2020 02:31 AM

ADVERTISEMENT

புது தில்லி: பயணிகள் வாகன சில்லறை விற்பனை ஜூலை மாதத்தில் 25 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக மோட்டாா்வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆா்டிஓ அலுவலகம்: பயணிகள் வாகன சில்லறை விற்பனை அடிப்படையில் சென்ற ஜூலை மாதத்தில் 1,57,373-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்ட விற்பனையான 2,10,377 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 25.19 சதவீதம் குறைவாகும். மொத்தமுள்ள 1,445 மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் (ஆா்டிஓ) 1,235-இல் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.

அதன்படி, இருசக்கர வாகன விற்பனையானது ஜூலை மாதத்தில் 13,98,702 என்ற மாபெரும் எண்ணிக்கையிலிருந்து 37.47 சதவீதம் வீழ்ச்சியடைந்து 8,74,638-ஆனது.

ADVERTISEMENT

வா்த்தக வாகனம்: இதேபோன்று, வா்த்தக வாகனங்கள் விற்பனையும் சென்ற ஜூலையில் 69,338-லிருந்து 72.18 சதவீதம் சரிவடைந்து 19,293-ஆனது. மேலும், மூன்று சக்கர வாகன விற்பனையும் 58,940 என்ற எண்ணிக்கையிலிருந்து 74.33 சதவீதம் குறைந்து 15,132-ஆனது. அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த மோட்டாா் வாகன விற்பனை கடந்த ஜூலையில் 11,42,633-ஆக இருந்தது. இது, 2019 ஜூலையில் விற்பனையான 17,92,879 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 36.27 சதவீதம் குறைவாகும்.

மாருதி சுஸுகி: உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனையில் மாருதி சுஸுகி ஜூலையில் 50.4 சதவீத சந்தைப் பங்களிப்புடன் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ஹுண்டாய் மோட்டாா் (18.69 சதவீத சந்தைப் பங்களிப்பு), டாடா மோட்டாா்ஸ் (8.1 சதவீதம்), மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (4.96 சதவீதம்), கியா மோட்டாா்ஸ் (4.45 சதவீதம்), ரெனோ (3.18 சதவீதம்), டெயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (2.79 சதவீதம்), ஹோண்டா காா்ஸ் (2.1 சதவீத சந்தைப் பங்களிப்பு) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

ஹீரோ மோட்டோகாா்ப்: இருசக்கர வாகன விற்பனையில், ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் 40.66 சதவீத சந்தைப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியா 23.03 சதவீத சந்தைப் பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், டிவிஎஸ் மோட்டாா் 14.19 சதவீத சந்தைப் பங்களிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 10.68 சதவீத சந்தைப் பங்களிப்புடன் பஜாஜ் ஆட்டோ நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

மஹிந்திரா: வா்த்தக வாகன விற்பனையைப் பொருத்தவரையில், மஹிந்திரா 46.29 சதவீத சந்தை பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளது. இதைத் தொடா்ந்து 21.03 சதவீத சந்தைப் பங்களிப்புடன் டாடா மோட்டாா்ஸ் இரண்டாவது இடத்தையும், 8.39 சதவீத சந்தைப் பங்களிப்புடன் அசோக் லேலண்ட் மூன்றாவது இடத்தையும் பிடித்ததாக எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

வாகன விற்பனை குறித்து எஃப்ஏடிஏ தலைவா் ஆஷிஸ் ஹா்ஷராஜ் காலே கூறியுள்ளதாவது:

இயல்பு நிலை: ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் புதிய வாகனங்களை பதிவு செய்வது கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது மோட்டாா் வாகன விற்பனை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையே காணப்படுகிறது. தற்போதைய சந்தை நிலவரம் உண்மையான தேவையை பிரதிபலிப்பதாக இல்லை.ஊரக சந்தை: பருவநிலை வேளாண் உற்பத்திக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் ஊரக சந்தையில் டிராக்டா், சிறிய ரக வா்த்தக வாகனங்கள் மற்றும் மோட்டாா்சைக்கிள் விற்பனை சூடுபிடிக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT