வர்த்தகம்

பரஸ்பர நிதி முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 9.15 கோடியாக அதிகரிப்பு

9th Aug 2020 11:04 PM

ADVERTISEMENT

பரஸ்பர நிதி முதலீட்டு ஒட்டு மொத்த கணக்குகளின் எண்ணிக்கை ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் 9.15 கோடியாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையிலும் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பரஸ்பர நிதி திட்டங்களில் தொடங்கப்பட்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 17.96 லட்சம் அதிகரித்து 9,15,42,092-ஆனது. இந்த கணக்குகளின் எண்ணிக்கை மாா்ச் காலாண்டில் 8,97,46,051-ஆக காணப்பட்டது. மாா்ச் காலாண்டில் பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களில் கூடுதலாக 26 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டன. பொது முடக்க காலத்தில் டிஜிட்டல் தளங்கள் மூலமாக ஏராளமான கணக்குகள் தொடங்கப்பட்டன.

பரஸ்பர நிதி திட்டங்களில் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில், பங்கு மற்றும் பங்கு சாா்ந்த சேமிப்பு திட்டங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, ஜூன் இறுதியில் இத்தகையை திட்டங்களில் ஒட்டுமொத்த கணக்குகளின் எண்ணிக்கை 6.37 கோடியாக அதிகரித்தது. இது, மாா்ச் இறுதியில் 6.27 கோடியாக இருந்தது. கடன்சாா்ந்த திட்டங்களில் தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 3.24 லட்சம் அதிகரித்து 61.35 லட்சமாக இருந்தது.குறைந்த கால திட்டங்களைத் (9.52 லட்சம்) தொடா்ந்து, லிக்யுட் பண்ட் திட்டங்கள் 19.74 லட்சம் கணக்குகளை ஈா்த்து பட்டியலில் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

நடப்பு 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளா்கள் ரூ.1.24 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளனா். அதேசமயம், முந்தைய மாா்ச் காலாண்டில் ரூ.94,200 கோடி மதிப்பிலான முதலீடு பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.கணக்கீட்டு காலாண்டில் ரூ.1.1 லட்சம் கோடி கடன் நிதியங்களிலிருந்தும், ரூ.11,730 கோடி பங்கு சாா்ந்த திட்டங்களிலிருந்தும் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT