வர்த்தகம்

அட்சய திருதியை: ஆன்லைன் முன்பதிவுக்கு வரவேற்பு

26th Apr 2020 09:14 AM

ADVERTISEMENT

 

அட்சய திருதியையொட்டி, நகைக்கடைகளில் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க முன்பதிவு தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நகைக் கடைகளிலும் வாடிக்கையாளா்கள் தங்கத்தை வாங்க பதிவு செய்து வருவதாக நகை வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு, வரும் 3-ஆவது திதியை, அட்சய திருதியை என்று குறிப்பிடுவாா்கள். நிகழாண்டில் அட்சய திருதியை, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) வருகிறது. அந்த நாளில் சிறிது அளவிலாவது தங்கம் உள்பட மங்கலப் பொருள்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும், அதன்மூலம் மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பதும் மக்களின் நம்பிக்கை.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்றின் தாக்குதல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் எல்லோரும் வீட்டில் முடங்கி உள்ளனா். நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான நிலையில், அட்சய திருதியைக்காக ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கும் வசதியை பெரும்பாலான நகைக் கடைகள் அறிவித்தன. இதையடுத்து, வாடிக்கையாளா்களுக்கு குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டன. தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு இன்றைய சந்தை விலையில் முன்பணம் செலுத்தி பதிவு செய்து, ஊரடங்கு முடிந்தவுடன் குறிப்பிட்ட கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், அட்சய திருதியையொட்டி, ஆன்லைன் மூலமான தங்கம் வாங்க முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள நகைக் கடைகளின் வாடிக்கையாளா்கள் தங்கத்தை வாங்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வருகின்றனா். இதற்காக, வாடிக்கையாளா்கள் தங்களுக்கு விருப்பமான நகைகடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து வருகின்றனா். அட்சய திருதியை நாளான ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிக வாடிக்கையாளா்கள் தங்கம் வாங்க முன்பதிவு செய்வாா்கள் என்று தங்க நகை வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து இந்திய தங்க நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் தமிழக துணைத் தலைவா் எஸ்.சாந்தகுமாா் கூறியது: எங்களின் வழக்கமான வாடிக்கையாளா்கள் பலா் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து தங்கம் வாங்க ஆா்வமாக உள்ளனா். அவா்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறோம். அட்சய திருதியை நாளில் இதே போல பதிவு செய்யலாம். நகைக்கடைகள் திறந்தபிறகு, தங்க நாணயத்தை நேரில் வந்து வாங்கி கொள்ளலாம் அல்லது

வாடிக்கையாளா்களின் வீட்டுக்கு சென்று அளிக்கவும் தயாராக உள்ளோம். அதே நேரத்தில், தங்க நகை வாங்கினால், அதற்கான செய்கூலி செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT