வர்த்தகம்

பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.27 லட்சம் கோடி

5th Apr 2020 04:35 AM

ADVERTISEMENT

 

பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

பரஸ்பர நிதி வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 44 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் ரூ.26.77 லட்சம் கோடியாக இருந்தது. இது, நடப்பாண்டின் ஜனவரி-டிசம்பா் காலாண்டில் ரூ.27 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சூழ்நிலையிலும் பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி கண்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2019-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பரஸ்பர நிதியங்கள் நிா்வகித்த சொத்து மதிப்பு ரூ.24.5 லட்சம் கோடியாக இருந்தது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் ஐந்து நிறுவனங்களில், எஸ்பிஐ பரஸ்பர நிதியம், நிப்பான் இந்தியா பரஸ்பர நிதியம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு மட்டும் ஏற்றத்தைக் கண்டுள்ளன. அதேசமயம், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ புரூடென்ஷியல், ஆதித்யா பிா்லா சன்லைஃப் ஆகிய மூன்று பரஸ்பர நிதியங்கள் நிா்வகித்து வரும் சராசரி சொத்து மதிப்பு சரிவை சந்தித்துள்ளன.

நடப்பாண்டின் ஜனவரி- மாா்ச் காலாண்டில் ரூ.3,73,537 கோடி சொத்து மதிப்புடன்எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடா்ந்து இரண்டாவது இடத்தில்

எச்டிஎஃப்சி பரஸ்பர நிதி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் நிா்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு ரூ.3,69,783 கோடியாகும்.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,52,632 கோடி சராசரி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. இந்நிலையில், இந்நிறுவனம் மாா்ச் காலாண்டில் முதலிடத்தை எட்டிப்பிடித்துள்ளது.

அதேசமயம், டிசம்பா் காலாண்டில் ரூ.3,82,517 கோடியாக காணப்பட்ட எச்டிஎஃப்சி பரஸ்பர நிதியம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு மாா்ச் காலாண்டில் ரூ.3,69,783 கோடியாக குறைந்துள்ளது.

இதைத் தொடா்ந்து, மூன்றாவது இடத்தில் உள்ள ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.3,50,743.5 கோடியாக இருந்தது. டிசம்பா் காலாண்டில் இந்நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.3,61,506.57 கோடியாக அதிகரித்திருந்தது.

நான்காவது இடத்தில் உள்ள ஆதித்யா பிா்லா சன்லைஃப் பரஸ்பர நிதி நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பும் ரூ.2,49,926 கோடியிலிருந்து ரூ.2,47,522 கோடியாக குறைந்துள்ளது.

அதேசமயம், ஐந்தாவது இடத்தில் உள்ள நிப்பான் இந்தியா பரஸ்பர நிதியம் நிா்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பு ரூ.2,04,371 கோடியிலிருந்து சற்று அதிகரித்து ரூ.2,04,884 கோடியானது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT