வர்த்தகம்

கடன்பத்திரம் மூலம் ரூ.500 கோடி திரட்டியது ஐஓபி

22nd Sep 2019 01:23 AM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) கடன்பத்திர வெளியீட்டு மூலம் ரூ.500 கோடியை திரட்டிக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பேஸல் 3 டயர்-2 கடன்பத்திரங்கள் மூலமாக வங்கி ரூ.500 கோடியை திரட்டியுள்ளது. 
வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் இந்த நிதி திரட்டிக் கொள்ளப்பட்டுள்ளது.
இக்கடன்பத்திர வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. கடன்பத்திர வெளியீட்டின் அடிப்படை அளவு ரூ.500 கோடியாக மட்டுமே இருந்தது. 
இந்த நிலையில், பல்வேறு வட்டி விகிதங்களில் ரூ.855 கோடி மதிப்பிலான கடன்பத்திரங்கள் வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
இருப்பினும், வங்கி ரூ.500 கோடி மதிப்பிலான கடன்பத்திர விண்ணப்பங்களை மட்டுமே ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.
திரட்டிக் கொள்ளப்படும் இந்த தொகை வங்கியின் வளர்ச்சிக்கும், ஒழுங்காற்று விதிமுறை தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என அந்த செய்திக்குறிப்பில் ஐஓபி தெரிவித்துள்ளது. 
அத்தியாவசியமற்ற சொத்துகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.850 கோடி மூலதனத்தை நடப்பு நிதியாண்டில் திரட்ட திட்டமிட்டுள்ளதாக கடந்த மே மாதத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT