பெரு நிறுவன வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரிப்பு

பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பெரு நிறுவன வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரிப்பு


பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே  நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது செயல்பாட்டில் உள்ள பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக (கூடுதல் வரி நீங்கலாக) குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டதையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
முதலீட்டாளர்கள் பல்வேறு முன்னணி நிறுவனப் பங்குகளை போட்டி போட்டு வாங்கினர். அதன் காரணமாக, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, இன்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி, எச்யுஎல், எல் & டி பங்குகளின் விலை 12.52 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. 
அதேசமயம், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், என்டிபிசி, டெக் மஹிந்திரா பங்குகளின் விலை 2.39 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் (5.32%) அதிகரித்து 38,014 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 569 புள்ளிகள் (5.32%) உயர்ந்து 11,274 புள்ளிகளில் நிலைபெற்றது.
முதலீட்டாளர்களுக்கு ரூ.6.82 லட்சம் கோடி ஆதாயம்: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொடர் நடவடிக்கையாக, மத்திய நிதி அமைச்சரின் வரி குறைப்பு அறிவிப்பால் மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 2,284 புள்ளிகள் வரை அதிகரித்தது.
இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.6,82,938.6 கோடி அதிகரித்து ரூ.1,45,37,378.01 கோடியைத் தொட்டது. இது, முதலீட்டாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com