கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. 
சவூதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 15 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ள பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது நாட்டின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பணவீக்கத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்று நம்பியிருந்த சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.
 இதையடுத்து, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர்.
சர்வதேச அளவில் தற்போதுள்ள சாதகமற்ற நிலவரங்களை கருத்தில் கொண்ட அந்நிய நிதி நிறுவனங்களும் தொடர்ந்து அதிக அளவில் பங்குகளை விற்று இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறின. செவ்வாய்க்கிழமையன்று மட்டும் ரூ.808.29 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய நிதி நிறுவனங்கள் விற்பனை செய்தன. பங்குச் சந்தையின் கடும் சரிவுக்கு இது மேலும் வழிவகுத்தது.
மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் சரிவை சந்தித்தன. குறிப்பாக, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, நிதி, எண்ணெய்-எரிவாயு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 3.80 சதவீதம் வரை குறைந்தன. 
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல்ஸ், மாருதி சுஸுகி, எஸ்பிஐ பங்குகளின் விலை 6.19 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனப் பங்குகளில், ஏஷியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளின் விலை மட்டுமே ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில், திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 642 புள்ளிகள் (1.73%) சரிந்து 36,481 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 185 புள்ளிகள் (1.69%) குறைந்து 10,817 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com