ஜவுளி ஏற்றுமதியில் மந்த நிலை

​தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுவதாலும் கரூரில் ஜவுளி ஏற்றுமதி 30 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.


தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுவதாலும் கரூரில் ஜவுளி ஏற்றுமதி 30 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களின் உற்பத்தியில் உலக வரைபடத்தில் கரூருக்கு என தனியொரு இடமுண்டு. இங்கு உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களான திரைச்சீலைகள், அலங்கார குஷன்கள், மேஜை விரிப்பான்கள், போர்வை, கால்மிதியடி போன்றவை ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும், அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.3,000 கோடி வரை அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் இந்த தொழில் கடந்த ஆறு மாதங்களாக சரிவைக் கண்டு வருகின்றது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினரும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை உறுப்பினருமான ஆர்.ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் உற்பத்தி செய்யப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் மிகவும் நேர்த்தியாகவும், தரமானதாகவும் இருப்பதால் அயல்நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடத்தப்படும் ஜவுளிக் கண்காட்சி மூலம் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் கிடைக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சாயப் பட்டறைப் பூங்கா இல்லாதது, சலவைப்பட்டறைகள் இல்லாமை, அடிக்கடி நூல் விலை உயர்வு போன்றவற்றால் வீட்டு உபயோக ஜவுளித் தொழில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியது. இந்நிலையில், ஐஜிஎஸ்டி வரி செலுத்திய வகையில்,  திருப்பித் தரப்பட வேண்டிய தொகை கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் ரூ.300 கோடியை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 

இதனால் ஜவுளித் தொழிலில் மீண்டும் பணத்தை முதலீடு செய்ய முடியாமல் அவதியுற்று வருகிறோம். 

உடனடியாக எங்களுக்கான தொகையை விடுவிக்குமாறு அண்மையில் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை, அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் கரூர் ஜவுளி உற்பத்தி குறைந்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்போ கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 

அண்மையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததும், ஜவுளிப் பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமன்றி, அனைத்து ரக ஏற்றுமதியாளர்களையும் மிகவும் கவலையடையச் செய்துள்ளது.

 கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 30 சதவீத ஜவுளிப் பொருள் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. எனவே மத்திய அரசு  உடனே இந்த பிரச்னைகளில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். 

அவ்வாறு தீர்வு கண்டால்தான் கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை தொடர்ந்து சம நிலையில் வைத்திருக்க முடியும். தொடர்ந்து நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித் தர முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com