கசக்கும் கரும்பு விவசாய தொழில்

தாராபுரம் பகுதியில் நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவை மூடப்பட்டதால் கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கசப்பை அனுபவித்து வருகின்றனர்.
கசக்கும் கரும்பு விவசாய தொழில்

தாராபுரம் பகுதியில் நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவை மூடப்பட்டதால் கரும்பை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கசப்பை அனுபவித்து வருகின்றனர்.

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளான அலங்கியம், சீத்தக்காடு, தளவாய்பட்டினம், செல்லம்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்த சாகுபடிக்குப் பருவ மழையும், அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரும் கரும்பு விவசாயிகளுக்கு கைகொடுத்து வந்தது. தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் இருபுறங்களிலும்  நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் 100-க்கும் மேல் செயல்பட்டு வந்தன. இங்கு தயாரிக்கப்படும் பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதுடன் பழனி, மதுரை, திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், ஓணம்,  பொங்கல் பண்டிகைக்கு கேரளம்,  ஆந்திரம் உள்ளிட்ட  மாநிலங்களுக்கு  சுமார்  200 டன்  வரையில்  வெல்லம்  அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ஆலைகளின் மூலம் ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை  வாய்ப்பைப்   பெற்று வந்தனர்.

நீர்ப் பற்றாக்குறை, வெள்ளை ஈ தாக்குதலால் கரும்பு உற்பத்தி பாதிப்பு:

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், அமராவதி அணையில் இருந்து கிடைத்து வந்த பாசன நீரின் அளவு குறைந்ததாலும் தாராபுரம் பகுதியில் கரும்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. அதே போல், கரும்பு பயிர்களில் வெள்ளை ஈ, வேர்புழுத் தாக்குதலாலும் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மூலப்பொருள்கள், ஆள் கூலி பல மடங்கு அதிகரிப்பு: கடந்த 10 ஆண்டுகளாக கரும்பு வெட்டும் ஆள்களின் கூலி, மூலப்பொருள்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் ஆலைகளை மூடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். 30 கிலோ சிப்பம் கொண்ட உருண்டை வெல்லம் விலை 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.700- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதே 30 கிலோ வெல்லம் ரூ. 850- க்குதான் விற்பனை செய்யப்படுகிறது. கரும்பை வெட்டி ஆலைக்கு கொண்டு வருவதற்கான ஆள்கூலியும்  பல மடங்கு உயர்ந்துள்ளது. அதே போல், உற்பத்தி செலவு, கரும்பை ஆலைக்கு கொண்டு வரும் வாடகை, தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றின் விலையோ சீராக இல்லாமல் ஏறியும், இறங்கியும் உள்ளது. இதனால் தாராபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கரும்புக்குப் பதில் தென்னை விவசாயத்துக்கு மாற உள்ளனர்.

அமராவதி சர்க்கரை ஆலை குளறுபடியால் திண்டாடும் விவசாயிகள்: உடுமலை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு அமராவதி சர்க்கரை ஆலையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்திருந்தார். ஆனால் ஆலையை நவீனப்படுத்த சர்க்கரை ஆலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக ஆலையில் சரியாக உற்பத்தி நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் உற்பத்தி தொடங்கியபோது போதிய அளவு கரும்பைக் கொள்முதல் செய்யாததாலும், விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யாததாலும் கரும்பு விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் தாராபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளன.  தற்போது இந்தப் பகுதியில் ஒரே ஒரு ஆலை மட்டுமே இயங்கி வருகிறது. ஆகவே, அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்துவதுடன்,  நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இதுகுறித்து அலங்கியம் சாலை தீர்த்தக்காட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ செல்வநாயகி அம்மன் நாட்டு சர்க்கரை ஆலை உரிமையாளர் என்.நல்லசாமி கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். மூலப்பொருள்களின் விலை உயர்வு, தயாரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தாராபுரம் பகுதியில் 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 

 மேலும், கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது தென்னை மரங்களை நட முடிவு செய்துள்ளனர். தற்போது அலங்கியம் பகுதியில் எனது ஆலையை மட்டுமே நஷ்டத்தில் இயக்கி வருகிறேன். போதாக்குறைக்கு அரசும் வெளியில் இருந்து வெல்லத்தை இறக்குமதி செய்வதாலும், போதிய விலை இல்லாததாலும் நஷ்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 
ஆகவே, உள்ளூர் விவசாயிகள் தயாரிக்கும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரையின் விலையை உயர்த்துவதுடன், நியாய விலைக்கடைகளில் விற்பனையை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தத் தொழிலைப் பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு  வட்டி கட்ட முடியாமல் தவிக்க நேரிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com