வர்த்தகம்

சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிவு

13th Sep 2019 12:33 AM

ADVERTISEMENT


முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாகவிருந்ததை முன்னிட்டு பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் இறக்கத்தை சந்தித்தது.
பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை வெளியாகவிருந்ததை எதிர்நோக்கிய முதலீட்டாளர்கள் தற்சார்பு கருதி, பங்குகளை விற்பனை செய்தனர். அண்மையில் கிடைத்த விலை ஏற்றம் கண்ட பங்குகளை அவர்கள் லாபநோக்குடன் விற்பனை செய்ததால் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.
அமெரிக்க-சீனா இடையே வர்த்தகப் போர் தொடர்பான பதற்றம் குறைந்துள்ளதையடுத்து சர்வதேச சந்தைகளில் ஏற்றமான நிலை தென்பட்டது.  இருப்பினும், இது இந்தியப் பங்குச் சந்தைகளின் உயர்வுக்கு கைகொடுக்கவில்லை.
மும்பை பங்குச் சந்தையில், மோட்டார் வாகனம், தொலைத்தொடர்பு, எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு, கட்டுமானம், தொழில்நுட்பத் துறை குறியீட்டெண்கள் 1.92 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், வங்கி, நிதி, பொறியியல் சாதன துறை குறியீட்டெண்கள் 0.35 சதவீதம்  வரை உயர்ந்தன.
புதன்கிழமை வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டிய யெஸ் வங்கி பங்கின் விலை வியாழக்கிழமை வர்த்தகத்தில் 5.10 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, ஏஷியன் பெயின்ட்ஸ், ஐடிசி, கோட்டக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் பங்குகளின் விலை 4.76 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் தேவை அதிகரித்ததையடுத்து, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இன்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, டெக் மஹிந்திரா மற்றும் ஓஎன்ஜிசி பங்குகளின் விலை 2.13 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 166 புள்ளிகள் சரிந்து 37,104 புள்ளிகளாக நிலைபெற்றது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 52 புள்ளிகள் குறைந்து 10,982 புள்ளிகளாக நிலைத்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT