வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

அதிரடி தள்ளுபடிகள்... ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் காட்டில் அடைமழை!

By நாகா| DIN | Published: 09th September 2019 03:46 AM

ரொக்கம் கொடுத்து வாகனங்கள் வாங்குபவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மிச்சம் பிடிக்க முடியும்.


அண்மைக் காலமாக வாகனங்களின் விற்பனை வீழ்ச்சி, ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஆள்குறைப்பு செய்திகளையே வாடிக்கையாளர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆனால், அவர்களை உற்சாகப்படுத்தும் மற்றொரு தகவலும் உண்டு.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடியை வாரி வழங்குவதுதான் அந்த மகிழ்ச்சிகரமான தகவல்.

பொதுவாக வாகனங்களுக்கு 5 அல்லது 7 சதவீதம் தள்ளுபடி அளித்தாலே அது பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் இப்போது சில நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு 29 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கத் தயாராக இருக்கின்றன.
பொதுவாக டிசம்பர் மாதத்தில்தான் அனைத்து நிறுவனங்களும் பெரிய அளவில் தள்ளுபடிகளை அறிவிக்கும். அந்த ஆண்டுக்குள் வாகன இருப்பைக் குறைத்து பணமாக்குவதற்காக அந்த அறிவிப்புகளை நிறுவனங்கள் மேற்கொள்ளும்.

ஆனால், அதுபோன்ற அதிரடி தள்ளுபடிகளை இந்த செப்டம்பர் மாதத்திலேயே நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

தள்ளுபடி தருவதில் யோசித்து யோசித்து செயல்படும் மாருதி சுஸூகி நிறுவனமே, தற்போது தனது கார்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1.2 லட்சம் வரை தள்ளுபடிகளை வாரி வழங்குகிறது.

அந்த நிறுவனத்தின் ஆல்ட்டோ கார்களின் விலை 18 முதல் 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 3 மாதங்களில் மாருதி நிறுவனம் சராசரியாக வாகனம் ஒன்றுக்கு ரூ.1,816 முதல் ரூ.16,941 வரை தள்ளுபடி அளித்திருந்தது.

அடுத்தடுத்த மாதங்களில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

ஹுண்டாய் நிறுவனத்தைப் பொருத்தவரை, பொதுவாக அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் அளிக்கப்படும் தள்ளுபடிகளை அந்த நிறுவனம் தற்போதிலிருந்தே வழங்கத் தொடங்கிவிட்டது.

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம், தனது யாரிஸ் கார்களை விற்றுத் தீர்க்கும் நோக்கத்துடன் அவற்றுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கிறது.
ஹோண்டா நிறுவனமும் தன் பங்குக்கு ரூ.42,000}லிருந்து ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை தாராளமாக அள்ளி வீசுகிறது. அதன் சிஆர்வி ரகங்களுக்கு அதிகப்பட்ச தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

பிற கார் தயாரிப்பாளர்களான ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை ரூ.1.5 லட்சம் வரை குறைத்துள்ளன.

நிறுவனங்கள் ஒருபுறம் தாராள தள்ளுபடிகளை அளித்துக் கொண்டிருக்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்களிடம் தேங்கிக் கிடக்கும் வாகனங்களை விற்பனையாளர்களும் அதிரடி தள்ளுபடியுடன் விற்கத் தொடங்கியுள்ளனர்.

விற்பனையாளர்கள் தற்போது வழங்கி வரும் தள்ளுபடி, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருக்கக்கூடும் என்கிறார் இரு சக்கர வாகன விநியோகஸ்தர் ஒருவர்.

இது ஒருபுறமிருக்க, ரொக்கம் கொடுத்து வாகனங்கள் வாங்குபவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளை வேறு வழங்கி வருகின்றன. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மிச்சம் பிடிக்க முடியும்.

 

கார்கள், இருசக்கர வாகனங்களுக்குத்தான் என்றில்லை, வேன்கள், பேருந்துகள், லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களுக்கும் மிக அதிக அளவில் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன.

சொல்லப் போனால் இந்தப் பிரிவில்தான் தள்ளுபடி உச்சகட்டத்தைத் தொடுகிறது.

இந்தப் பிரிவில் நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.3.75 வரை விலைகள் குறைக்கப்படுகின்றன.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்படி தள்ளுபடிகளை அள்ளி வழங்குவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பாரத் ஸ்டேஜ்}6 தரக் கட்டுப்பாட்டு நிர்ணயங்களை நிறைவு செய்யும் வாகனங்களை மட்டுமே நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கெடுவுக்குப் பிறகு, தற்போதுள்ள பாரத் ஸ்டேஜ்}4 நிர்ணய வாகனங்களை நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது. 

எனவே, அதற்குள் தங்கள் கையிருப்பிலுள்ள வாகனங்களை விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று நிறுவனங்கள் துடிப்பதுதான் இந்த தாராள தள்ளுபடிகளுக்குக் காரணம்.

அந்த வகையில், இன்னும் சில மாதங்களுக்கு வாடிக்கையாளர் காட்டில் அடைமழை பெய்துகொண்டுதான் இருக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி
ஹீரோவின் மின்சார சைக்கிள்...
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகரிப்பு
ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் மாற்றமின்றி 1.08 சதவீதமாக நீடிப்பு