வர்த்தகம்

பங்குச் சந்தையில் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 337 புள்ளிகள் அதிகரிப்பு

7th Sep 2019 01:23 AM

ADVERTISEMENT


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்கள் சந்தைக்கு சாதகமான நிலையில் இருந்ததால் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மோட்டார் வாகன துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சில சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
குறிப்பாக, மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற அத்துறையினரின் கோரிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலின் பதில் சாதகமானதாக இருக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்பட்டது. அதன் காரணமாகவே, மோட்டார் வாகனப் பங்குகளில் அவர்கள் முதலீட்டை கணிசமாக அதிகரித்தனர்.
மேலும், அமெரிக்க மற்றும் சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போருக்கு சுமுக தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உலக சந்தைகளுக்கு வலு சேர்த்ததுடன் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள மோட்டார் வாகன துறை நிறுவனப் பங்குகள் அனைத்தும் ஏற்றத்தை சந்தித்தன. அதில் அதிகபட்சமாக மாருதி சுஸுகி பங்கின் விலை 3.61 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.90 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.58 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 2.34 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 2.14 சதவீதமும் அதிகரித்தன.
இவைதவிர, டெக் மஹிந்திரா, என்டிபிசி, ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் வங்கி பங்குகளின் விலை 3.77 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், யெஸ் வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஹெச்யுஎல் மற்றும் ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை 2.42 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் மோட்டார் வாகனம், மின்சாரம், உலோகம், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், எரிசக்தி, நிதித் துறை குறியீட்டெண்கள் 2.54 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
அதேசமயம், ரியல் எஸ்டேட், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள்துறையைச் சேர்ந்த குறியீட்டெண்கள் மட்டும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 337 புள்ளிகள் அதிகரித்து 36,981 புள்ளிகளாக நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 10,946 புள்ளிகளாக நிலைத்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT