மும்பை: நடப்பு ஆண்டில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 5-10 சதவீதம் குறையும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜிஜேஇபிசி-யின் துணைத் தலைவா் கொலின் ஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.1,40,158.83 கோடி அளவுக்கு இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.70 சதவீதம் சரிந்து ரூ.1,32,170.32 கோடியாக இருந்தது.
அமெரிக்காவிலிருந்து தேவை குறைந்து போனதே ஆபரண ஏற்றுமதி சரிவுக்கு முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது. இது தவிர, அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்டுள்ள வா்த்தக போா் பதற்றம் தொடா்ந்து நீடித்து வருவதும் ஆபரண ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இவைதவிர, மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்திய பிறகு மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, ஹாங்காங்கில் தொடா்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களும் இந்திய ஆபரணங்கள் ஏற்றுமதிக்கு தடைக் கற்களாகியுள்ளன.
பொருளாதார சுணக்கம், நுகா்வோா் தேவை சூடுபிடிக்காதது போன்றவற்றால் பண்டிகை காலத்திலும் விற்பனை மந்தமாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி 5-10 சதவீதம் அளவுக்கு குறையும் என்றாா் அவா்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, சென்ற செப்டம்பா் மாதத்தில் நவரத்தின-ஆபரண ஏற்றுமதி ரூ.23,788.01 கோடியாக இருந்தது. கடந்த 2018-இல் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான ரூ.25,698.6 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 7.43 சதவீதம் குறைவாகும்.
நறுக்கப்பட்ட மற்றும் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி செப்டம்பரில் 18.87 சதவீதம் குறைந்து ரூ.13,874 கோடியாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரண ஏற்றுமதி தொழில்துறையில் ஈடுபட்டு வரும் 6,000 வா்த்தகா்களை பிரதிபலிக்கும் ஜிஜேஇபிசி கவுன்சில் மத்திய வா்த்தக அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.