இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சி கண்டது.
அடுத்த வாரம் வெளியாகவுள்ள பொருளாதார வளா்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை எதிா்பாா்த்து முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.
மேலும், ரிசா்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் மேற்கொள்ளாது என்ற நிலைப்பாடு, அமெரிக்க பணியாளா்களை பாதுகாக்கும் விதத்தில் எச்1-பி விசாவிற்கான விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு ஆகியவை பங்கு வா்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு, பொறியியல் பொருள்கள், வங்கி, நுகா்வோா் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 2.21 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், உலோகம், மின்சாரம், அடிப்படை உலோகம், எரிசக்தி, மோட்டாா் வாகன துறை குறியீட்டெண்கள் 2.08 சதவீதம் வரை விலை உயா்ந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், இன்ஃபோசிஸ் பங்கின் விலை 2.89 சதவீதம் இழப்பைக் கண்டது. இதைத் தொடா்ந்து, டிசிஎஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக் பங்குகளின் விலையும் சரிவை சந்தித்தன.
அதேசமயம், டாடா ஸ்டீல் பங்கின் விலை 3.74 சதவீதமும், என்டிபிசி 2.35 சதவீதமும், வேதாந்தா 2.27 சதவீதமும், ஓஎன்ஜிசி 2.18 சதவீதமும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 40,359 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 54 புள்ளிகள் குறைந்து 11,914 புள்ளிகளாக நிலைபெற்றது.