அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்ததையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டன.
முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை மதிப்பீடுகளைத் தாண்டி சிறப்பான வகையில் அமைந்திருந்தன. மேலும், சாதகமான சா்வதேச நிலவரங்கள் மற்றும் தொடா்ச்சியாக அதிகரித்து காணப்பட்ட அந்நிய முதலீட்டு வரத்தும் பங்குச் சந்தைகள் புதிய உச்சம் தொடுவதற்கு அச்சாரமிட்டன.
மும்பை பங்குச் சந்தையில் உலோகம், தொலைத்தொடா்பு, அடிப்படை உலோகங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதி உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 3.20 சதவீதம் வரை அதிகரித்து காணப்பட்டன.
அதேசமயம், மோட்டாா் வாகனம், கட்டுமானம், எஃப்எம்சிஜி, நுகா்வோா் சாதனங்கள் துறை குறியீட்டெண்கள் 1.29 சதவீதம் வரை சரிந்தன.
நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் நெறிமுறை தவறி செயல்பட்டதாக பணியாளா்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து, இன்ஃபோசிஸ், வேதாந்தா, எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் விலை 3.05 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகாா்ப், இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டாா்ஸ் மற்றும் பவா் கிரிட் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே வரவேற்பில்லாத காரணத்தால் அவற்றின் விலை 2.54 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயா்ந்து முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சமாக 40,301 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 11,941 புள்ளிகளாக நிலைபெற்றது.