வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

அந்நியச் செலாவணி கையிருப்பு 41,851 கோடி டாலராக அதிகரிப்பு

DIN | Published: 05th May 2019 01:29 AM

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,851 கோடி டாலரை (ரூ.29.29 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 437 கோடி டாலர் (ரூ. 30,520 கோடி) உயர்ந்து 41, 851 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இரண்டாவது முறையாக டாலர்-ரூபாய் பரிமாற்ற (ஸ்வாப்) திட்டத்தை ரிசர்வ் வங்கி ஏப்ரல் 23-ஆம் தேதி செயல்படுத்தியதன் விளைவாக செலாவணி கையிருப்பு கணிசமான ஏற்றத்தை கண்டுள்ளது.
 இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 73 கோடி டாலர் உயர்ந்து 41, 414 கோடி டாலராக காணப்பட்டது.
 மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 438 கோடி டாலர் அதிகரித்து 39,042 கோடி டாலராக காணப்பட்டது.
 தங்கத்தின் கையிருப்பில் மாற்றம் எதுவுமின்றி 2,330 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
 அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் இருப்பு 59 லட்சம் டாலர் குறைந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.36 கோடி டாலர் சரிந்து 334 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 கடந்தாண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாற்றில் முதல் முறையாக 42,603 கோடி டாலரை எட்டி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 ஆனால், அதன்பிறகு காணப்பட்ட சாதகமற்ற சூழல்களால் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் 2,000 கோடி டாலர் (சுமார் ரூ.2.17 லட்சம் கோடி) அளவுக்கு சரிவு ஏற்பட்டது.
 ஆனால் தற்போது, ரிசர்வ் வங்கி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க டாலர்-ரூபாய் "ஸ்வாப்' உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையடுத்து டாலர் கையிருப்பு மீண்டும் 42,000 கோடி டாலரை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்
இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 
ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு