சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

விற்பனையில் முதலிடம் பிடித்த மாருதி ஆல்டோ

DIN | Published: 23rd March 2019 12:47 AM


கடந்த பிப்ரவரி மாதத்தில் மாருதி ஆல்டோ கார்கள் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளன.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாத கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ கார்கள் முதலிடம் பிடித்துள்ளன.அந்த மாதத்தில் மட்டும் 24,751 ஆல்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் விற்பனையான ஆல்டோ கார்களின் எண்ணிக்கை 19,941-ஆக மட்டுமே இருந்தது.
அப்போது, கார்கள் விற்பனையில் முதலிடத்தில் இருந்த மாருதி டிஸையர் கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆல்டோ கார்கள் முதலிடத்தைப் பிடித்தன.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், டிஸையர் கார்கள் விற்பனையில் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 20,941 டிஸையர் கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 15,915 கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாத கார் விற்பனையில் இரண்டாவது இடத்தைப்  பிடித்ததும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களே ஆகும். அந்த மாதத்தில், மாருதியின் 18,224 ஸ்விஃப்ட் ரகக் கார்கள் விற்பனையாகின. முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத விற்பனையான 17,291 கார்களைவிட இது அதிகம்.
அதே மாருதி நிறுனத்தின் பலேனோ கார்கள்தான், பிப்ரவரி மாத விற்பனையில் 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 15,807 பலேனோ கார்கள் விற்பனையாகிருந்த நிலையில், இந்த பிப்ரவரி மாதம் அந்த ரகத்தைச் சேர்ந்த 17,944 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
5-ஆவது மற்றும் 6-ஆவது இடத்தையும், மாருதி சுஸுகி நிறுவனக் கார்களே கைப்பற்றியுள்ளன. அந்த நிறுவனத்தின் வேகன்-ஆர் கார்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் 15,661 விற்பனையாகி, 5-ஆவது இடத்தில் உள்ளன. முந்தைய ஆண்டின் பிப்ரவரியில் 14,029 வேகன்-ஆர் கார்களே விற்பனையாகியிருந்தன.
6-ஆவது இடத்தில் மாருதியின் ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனமான விடாரா பிரெஸ்ஸா உள்ளது.
பிரீமியம் வகையைச் சேர்ந்த ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் எலைட் ஐ-20 ரகத்தைச் சேர்ந்த 11,547 கார்கள் விற்பனையாகி, கடந்த பிப்ரவரி மாத கார் விற்பனையில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத விற்பனையைவிட இது 1,831 குறைவாகும்.
ஹூண்டாயின் கிராண்ட் ஐ-10 கார்களும், டாடா மோட்டார்ஸின் டியோகோவும் பிப்ரவரி மாத விற்பனையில் முறையே 9 மற்றும் 10-ஆவது இடத்தைப் பிடித்தன என்று இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பண்டிகை காலத்தில் கார் விற்பனை வேகமெடுக்கும்: மாருதி சுஸுகி நம்பிக்கை
பங்குச் சந்தையில் திடீர் எழுச்சி
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: மூடிஸ்
பொருளாதாரத்தை சீரமைக்க அசாதாரண நடவடிக்கை தேவைப்படுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர்
சென்னையில் பிரம்மாண்ட அளவிலான டெலிவரி மையம்! - அமேசான் அறிவிப்பு