வர்த்தகம்

செயல் வடிவம் பெறாத செபியின் அதிகாரங்கள்...

4th Mar 2019 03:47 AM | - ஜி.கே.

ADVERTISEMENT

"முதலீடு  என்பது அறிவார்ந்தும், அறம் சார்ந்தும் இருக்க வேண்டும்; அப்படி இல்லாத முதலீடு அனைத்தும் வெறும் விழலுக்கு இறைத்த நீர்' - இது அமெரிக்க பொருளாதார நிபுணர் வாரன் பஃப்பெட் முன்வைக்கும் கருத்து. 

முதலீடு என்ற ஒற்றை வார்த்தைக்குள் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அடங்கியிருக்கிறது. அது தனி மனிதர்களின் சிறு முதலீடாகட்டும்; அல்லது ஒரு நிறுவனத்தின் பெரு முதலீடாகட்டும், அவை அனைத்துமே ஒரு தேசத்தின் பொருளாதார ஆற்றலை திருத்தி எழுதக் கூடிய வல்லமை பெற்றவை.

பங்கு பரிவர்த்தனைகளையும், முதலீட்டு நடவடிக்கைகளையும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வாரியங்கள் ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் தனிநபர்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரங்களும் அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை சரிவரப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக அந்த வாரியங்கள் செயல்படுகின்றனவா? என்பதுதான் மிகப் பெரிய வினா.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொருத்தவரை "செபி' என அழைக்கப்படும் பங்கு பரிவர்த்தனை வாரியம் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (எஸ்இசி) எனப்படும் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இவ்விரு அமைப்புகளும் முதலீட்டு நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டவைதான். ஆனால், அவற்றின் செயல்பாடுகளில்தான் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், உலக அளவில் கிளைகளை அமைத்துள்ளது. இந்தியாவிலும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அது செயல்பட்டு வருகிறது. புணே, சென்னையில் புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அனுமதியைப் பெற மகாராஷ்டிரம் மற்றும் தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அமெரிக்காவின் எஸ்இசி ஆணையமும், அந்நாட்டு நீதித் துறையும் விசாரணை நடத்தியதில் லஞ்சம் கொடுத்தது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, அமெரிக்காவின் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, சட்ட ஆலோசகர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இது போல, எத்தனையோ விதிமீறல்களில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை அமைப்பு கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததுடன், அவற்றில் ஈடுபட்டவர்களுக்கு கடிவாளமும் போட்டுள்ளது.

குறிப்பாக, விதிகளை மீறிய குற்றத்துக்காக பாங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எஸ்இசி ஆணையம் எடுத்துள்ளது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமானது முதலீட்டாளர்களையும், பங்குதாரர்களையும் பாதிக்கும் எந்த செயல்பாடுகளையும் வெறுமனே வேடிக்கை பார்க்காது என்பது இச்சம்பவங்கள் சான்று.

ஆனால், இந்தியாவில் உள்ள செபி அமைப்பு அதேபோன்ற துடிப்புடன் செயல்படுகிறதா எனக் கேள்வி எழுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது - அமெரிக்க எஸ்இசி அமைப்பைக் காட்டிலும் அதிக அதிகாரங்களைக் கொண்டது செபி என்பது பரவலாக அறியப்படாத தகவல்.
தற்போது, சோதனை நடவடிக்கைகளுக்கும், தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதற்கும் அனுமதி வேண்டும் என்று மத்திய அரசை செபி வலியுறுத்தி வருகிறது. அது, நியாயம்தான். ஆனால், ஏற்கெனவே உள்ள அதிகாரங்களையும், சட்ட விதிகளையும் முழுமையாக செயல்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தந்ததாக செபியின் வரலாற்றில் ஒரு சம்பவம் கூட இல்லை.

முறையற்ற முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டப் பிரிவு 15-ஜியின் கீழ் அதிகபட்சமாக ரூ. 25 கோடி அல்லது முறைகேடாக ஈட்டிய லாபத்தைப் போல மூன்று மடங்கு தொகை அபராதமாக விதிக்க செபிக்கு அதிகாரம் உண்டு.

இன்று வரை அந்த உச்ச வரம்பை செபி பயன்படுத்தியதில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவேளை, இந்தியாவின் பங்கு மற்றும் பண்டகச் சந்தை பரிவர்த்தனைகளில் அந்த அளவுக்கு அபராதம் விதிக்கக் கூடிய சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் அரங்கேறாமல் இருந்திருக்கலாம் என எண்ண வேண்டாம். கடந்த கால வரலாற்றில், பங்கு பரிவர்த்தனை தொடர்பான எத்தனையோ பெரும் மோசடி சம்பவங்களையும், வர்த்தக விதிமீறல்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், அந்த விவகாரங்களில் தனது அதிகாரத்தை முழுமையாக செபி பிரயோகிக்கவில்லை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை. அதேபோன்று, முறையற்ற பங்கு பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை செபியால் பெற்றுத் தர முடியும். இதுவரை அப்படி எவருக்கேனும் தண்டனை வாங்கித் தந்ததாக தரவுகள் உள்ளனவா? நிச்சயமாக இல்லை.

முதலீட்டு விதிமீறல் விவகாரங்களில் விரைந்து விசாரணை நடவடிக்கைகளை நிறைவு செய்வதில்லை என்பது செபி மீது முன்வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் விவகாரங்களில் 60 சதவீதத்தை மட்டுமே  செபி நிறைவு செய்திருப்பது கடந்த சில ஆண்டுகளின் தரவுகளில் தெரியவரும் உண்மை.

அதற்காக, செபி அமைப்பு செயல்படுவதே இல்லை எனக் கூறிவிட இயலாது. ஏனெனில், அண்மையில் விதிகளை மீறி செயல்பட்ட மோத்திலால் ஓஸ்வால், இந்தியா இன்ஃபோ லைன், ஆனந்த் ரத்தி, ஜியோஜித் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் பங்கேற்ற தகுதியற்றவை என்று செபி அதிரடியாக அறிவித்தை மறந்துவிட முடியாது.

இருந்த போதிலும், தற்போதை விட தீவிரமாகவும், அதிகாரத்துடனும் செபி செயல்பட வேண்டும் என்பதே தற்போது பரவலாக வலியுறுத்தப்படும் கோரிக்கை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT