பிப்ரவரி மாத வாகன விற்பனை அதிகரிப்பு

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் அதிகரித்துக் காணப்பட்டது. எனினும்,  மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சற்று
பிப்ரவரி மாத வாகன விற்பனை அதிகரிப்பு


பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் அதிகரித்துக் காணப்பட்டது. எனினும்,  மாருதி சுஸுகி, டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சற்று சரிவடைந்துள்ளது.
மாருதி சுஸுகி:  நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை, கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது. கடந்த மாத விற்பனை 1,48,682-ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1,49,824 கார்கள் விற்பனையாகியிருந்தன. 
வாகன் ஆர், ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலீனோ, டிசையர் போன்ற சிறிய ரக கார்களின் விற்பனை பிப்ரவரி மாதம் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற மாதம், மொத்தம் 72,678 கார்கள் விற்பனையாகின. இதேபோல், செடான் சியாஸ், விதாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ், எர்டிகா போன்ற ரக கார்களின் விற்பனையும் 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அசோக் லேலண்ட்: ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை, பிப்ரவரி மாதம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த மாதம் மொத்தம் 18,245 வாகனங்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 18,181 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன.
அதே நேரத்தில்,  கனரக வர்த்தக பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 3 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 13,726 வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் 13,291 வாகனங்களே விற்பனையாகியுள்ளன.
எனினும், இலகு ரக வாகனங்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத்தில் 4,455 வாகனங்கள் விற்பனையான நிலையில், நிகழாண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 4,954 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
பஜாஜ்: பஜாஜ் நிறுவனத்தின் மூன்று மற்றும் நான்கு சக்கர வானங்களின் விற்பனை பிப்ரவரி மாதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 3,93,089 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மொத்தம் 3,57,883 வாகனங்கள் விற்பனையாகின.
இதேபோல், பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம், விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 3,27,985-ஆக உள்ளது.
டாடா மோட்டார்ஸ்: டாடா மோட்டார்ஸின் பிப்ரவரி மாத விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் குறைந்து காணப்பட்டது.
கடந்த ஆண்டு 58,993 வாகனங்கள் விற்பனையான நிலையில், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை 57,221-ஆக இருந்தது. உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்து 18,110-ஆக இருந்தது. கடும் சவால்களுக்கு இடையில் பயணிகள் வாகன விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்துக் காணப்பட்டது என்று டாடா பயணிகள் வாகனப் பிரிவுத் தலைவர் மயங்க் பரீக் கூறினார்.
வர்த்தக வாகன விற்பனை எண்ணிக்கை 39,111-ஆக இருந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரியைவிட இது 5 சதவீதம் குறைவாகும். டாடா மோட்டார்ஸ் ஏற்றுமதி செய்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2,930 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் இருந்த விற்பனையைவிட இது 39சதவீத சரிவாகும். 
டிவிஎஸ் மோட்டார்ஸ்: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார்ஸின் பிப்ரவரி மாத விற்பனை கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் அதிகரித்து 2,99,353-ஆக இருந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,90,673 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில் விற்பனையானது 3 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த  இரு சக்கர வாகன விற்பனை 2 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2,85,611-ஆக இருந்தது. இதில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 2,31582 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com