வர்த்தகம்

ரூ.26 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்

23rd Jun 2019 04:39 AM

ADVERTISEMENT

சென்னையில் சனிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.26 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.  பவுனுக்கு ரூ.176 உயர்ந்து, ரூ. 26,072-க்கு விற்பனை செய்யப்பட்டது.  கடந்த 10 நாளில் பவுனுக்கு ரூ.1,096 வரை உயர்ந்துள்ளது. 
ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.27 ஆயிரத்தை விரைவில் தொடும் என்று தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை கடந்த  மாதத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வந்தது. ஜூன் 1-ஆம் தேதியன்று ஒரு பவுன் ரூ.24,632 ஆகவும், 19-ஆம் தேதி பவுன்  ரூ.25,176 ஆகவும் இருந்தது. அதன்பிறகு தங்கத்தின் விலை  அதிரடியாக உயரத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.25,704-ஆக  இருந்தது. இந்த விலை உயர்வு மேலும் தொடர்ந்தது. 
இந்நிலையில்,  சனிக்கிழமை ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 
அமெரிக்க, சீன இடையே வர்த்தகப் போர் நீடிக்கிறது. சீன பொருள்களுக்கு அமெரிக்காவிலும், அமெரிக்கா பொருள்களுக்கு சீனாவிலும் அபரிமிதமான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால், தொழில்துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் இப்போது தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதுதவிர, அமெரிக்காவில் பெடரல் கூட்டமைப்பு, வைப்பு நிதி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, வைப்பு நிதியில் முதலீட்டு செய்தவர்கள் தற்போது  தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதுதவிர, அமெரிக்க-ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை விரைவில் ரூ.27 ஆயிரத்தை தொடும் என்றார் அவர்.
தங்கம் விலை உயர்ந்து வந்தாலும், சனிக்கிழமை வெள்ளி விலை குறைந்தது. வெள்ளி கிராமுக்கு 69 பைசா குறைந்து  ரூ.40.31-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.690 குறைந்து, ரூ.40,310-ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,259
1 பவுன் தங்கம்    26,072
1 கிராம் வெள்ளி    40.31
1 கிலோ வெள்ளி    40,310

ADVERTISEMENT
ADVERTISEMENT