புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

18 ஆண்டுகளில் இல்லாத அளவில் பயணிகள் வாகன விற்பனை சரிவு

DIN | Published: 12th June 2019 12:56 AM


பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த மே மாதத்தில் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த 18 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும் என இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயணிகள் வாகன விற்பனை நடப்பாண்டு மே மாதத்தில் 2,39,347-ஆக இருந்தது. இது, கடந்தாண்டில் இதே கால அளவில் விற்பனையான 3,01,238 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைவாகும்.
கடந்தாண்டு அக்டோபரில் மட்டும் இதன் விற்பனை 1.55 சதவீதம் உயர்ந்திருந்தது. அதைத் தவிர்த்து கடந்த 11 மாதங்களில் 10 மாதங்கள் பயணிகள் வாகன விற்பனை சரிந்தே காணப்பட்டது. இதற்கு முன்பாக, கடந்த 2001 செப்டம்பரில்தான் பயணிகள் வாகன விற்பனை மிகவும் மோசமாக 21.91 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.
இதைத் தவிர, இருசக்கர வாகன விற்பனை மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனையும் சென்ற மே மாதத்தில் குறைந்தே காணப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் கார் விற்பனை 1,99,479-லிருந்து 26.03 சதவீதம் சரிந்து 1,47,546-ஆனது. மோட்டார் சைக்கிள் விற்பனை 12,22,164-லிருந்து 4.89 சதவீதம் குறைந்து 11,62,373-ஆனது.
ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை சென்ற மே மாதத்தில் 6.73 சதவீதம் குறைந்து 17,26,206-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே கால அளவில் இதன் விற்பனை 18,50,698-ஆக காணப்பட்டது.
பொருளாதார சுணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 10.62 சதவீதம் வீழ்ச்சியடைந்து 68,847-ஆக ஆனது.
அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மோட்டார் வாகன விற்பனை 22,83,262 என்ற எண்ணிக்கையிலிருந்து 8.62 சதவீதம் குறைந்து 20,86,358-ஆக ஆனது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்ஐஏஎம் அமைப்பின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்தூர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவு மே மாதத்திலும் தொடர் கதையாகி உள்ளது. மொத்த விற்பனை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது சில்லறை விற்பனை நிலவரம் ஓரளவுக்கு நல்ல நிலையில்தான் உள்ளது. இதனை உணர்ந்து பல நிறுவனங்கள் ஏற்கெனவே உற்பத்தி குறைப்பை அறிவிக்கத் தொடங்கி விட்டன.
தற்போதைய சந்தை நிலையை கருத்தில் கொண்டு மோட்டார் வாகன துறையை ஊக்குவிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டி.வி.எஸ். புதிய டயர் அறிமுகம்
இந்தியச் சந்தையில் சாம்சங்கின் நோட் 10 
ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்
சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து வர்த்தகம்
ஏ.டி.எம் கார்டுகளை ரத்து செய்ய திட்டம்: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு