வியாழக்கிழமை 27 ஜூன் 2019

பங்குச் சந்தையில் தொடர் முன்னேற்றம்  

DIN | Published: 11th June 2019 01:45 AM

சர்வதேச நிலவரங்களின் சாதகமான அம்சங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.
 வரி விதிப்பு விவகாரம் தொடர்பான பிரச்னையில் அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே ஏற்பட்டுள்ள சுமுகமான தீர்வு, சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கத் தவறவில்லை.
 இருப்பினும் வங்கி சாரா நிதி நிறுவன துறையில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி ஒட்டுமொத்த சந்தை போக்கை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. அதன் காரணமாக நிதி துறையைச் சேர்ந்த பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
 மும்பை பங்குச் சந்தையில், தொழில்நுட்பம், எப்எம்சிஜி, தொலைத்தொடர்பு, நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டெண்கள் 1.61 சதவீதம் வரை அதிகரித்தன.
 அதேசமயம், எண்ணெய்-எரிவாயு, மின்சாரம், நிதி மற்றும் வங்கி துறை குறியீட்டெண்கள் 1.20 சதவீதம் வரை இறக்கத்தை சந்தித்தன.
 நிறுவனங்களைப் பொருத்தவரையில் முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பால், டிசிஎஸ், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, எல் &டி, ஐடிசி, பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 2.39 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
 அதேசமயம், லாப நோக்கு விற்பனை காரணமாக யெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா மற்றும் ஓஎன்ஜிசி பங்குகளின் விலை 2.89 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
 மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்ந்து 39,784 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 11,922 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சரிவைக் கண்ட காபி ஏற்றுமதி
பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்: சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரிப்பு
ஃபியட் கிறிஸ்லரின் புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் ரகம் அறிமுகம்
தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 118.38 கோடியாக உயர்வு
வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமா..? ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி