திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

மீண்டும் நெருக்கடியில் ஜவுளி உற்பத்தித் தொழில்

DIN | Published: 10th June 2019 02:00 AM

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்குள்ள சாயப் பட்டறைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாநில சாயப் பட்டறைகளை நம்பியுள்ள தமிழக ஜவுளி உற்பத்தித் தொழில் மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
 இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியிலும், உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிப்பது கோவை மண்டலமே. ஜவுளி உற்பத்திக்குத் தேவையான அனைத்துத் தொழில்களும் தடையின்றி செயல்படும் காலங்களில் ஏற்றுமதி பிரச்னையின்றி நடைபெறும். இந்த ஜவுளி உற்பத்தி சங்கிலியில் ஏதாவது ஓர் இடத்தில் பிரச்னை நேரிடும்போது அது ஒட்டுமொத்த தொழில் துறையையும் பாதித்துவிடுகிறது.
 ஜவுளித் துறையில் முக்கிய இடத்தை வகிப்பது சாயசலவைத் தொழிலாகும். துணிகளை பிளீச்சிங் செய்வது, சாயமேற்றுவது போன்றவற்றைச் செய்யும் இந்த "பிராசசிங்' ஆலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வந்தன. தொடக்கத்தில் கைத்தறி ஆடைகளுக்கு சாயமேற்றும் பணியைச் செய்வதற்காக இந்த ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், ஆங்காங்கே குடிசைத் தொழில்கள்போல தொடங்கி நடத்தப்பட்டு வந்தன. நாளடைவில் மாசுக் கட்டுப்பாட்டு பிரச்னைகள் உருவானதால் இந்த ஆலைகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டன. சில பெரிய "பிராசசிங்' ஆலைகள் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.
 இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் துணி வகைகளை "பிராசசிங்' செய்வதற்காக குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நிலவும் கடுமையான வறட்சியால் அங்குள்ள ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் தமிழகத்தில் தயாராகும் துணிகள் தேக்கமடைந்து வருகின்றன.
 இந்தப் பிரச்னையால் ஓபன் எண்ட் மில்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறுகிறார் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.அருள்மொழி. இது குறித்து அவர் கூறியதாவது:
 பஞ்சாலைகளில் இருந்து வெளியேறும் தரமான கழிவுப் பஞ்சை (கோம்பர்) பயன்படுத்தி தயாரிக்கப்படும் நூல்களின் மூலமாகவே ஜீன்ஸ் பேண்ட், சட்டைகள், காடா துணி, படுக்கை விரிப்புகள், துண்டு, நைட்டிகள், கைப்பைகள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகள், வீட்டு உபயோகத் துணி வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நூல் தயாரிக்கும் தொழிலில் தமிழகத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் இயங்கி வருகின்றன.
 இந்த மில்கள் மூலம் தினசரி சுமார் 7 லட்சம் கிலோ உற்பத்தி நடைபெறுகிறது. எங்களிடமிருந்து பெறப்படும் நூலைப் பயன்படுத்தி திருப்பூர், பல்லடம், சோமனூர், அவிநாசி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. ஒரு தறி மூலம் நாளொன்றுக்கு 50 மீட்டர் வரையிலான துணி வகைகள் நெய்யப்படுகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு சாயப் பட்டறைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் இங்கு உற்பத்தியாகும் துணிகள் சாயமேற்றுவதற்கு அனுப்பப்படாமல் கிடங்குகளில் தேங்கத் தொடங்கியுள்ளன.
 துணிகள் தேங்குவதால் தறிகள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்கும், அதனால் ஓபன் எண்ட் மில்கள் நூல் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வறட்சியின்போது இந்தப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் "பிராசசிங்' தொழிலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. அதேநேரம், துணிகளை "பிராசசிங்' செய்வதற்காக ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி, பிறகு அங்கிருந்து கொண்டு வரும் வகையில் போக்குவரத்துக்கு மட்டுமே ஒரு மீட்டர் துணிக்கு ரூ.10 செலவாகிறது. எனவே உள்ளூரிலேயே "பிராசசிங்' தொழிலுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
 ஆனால், பிராசசிங் தொழில் சந்திக்கும் பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வை பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாங்கள் முன்மொழிந்துவிட்டதாகவும், அதை நிறைவேற்றுவது மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் கூறுகிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் பி.நடராஜ். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 இந்திய ஜவுளித் துறை சர்வதேச அளவுக்கு வளர முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் சாயசலவைத் தொழில் நெருக்கடிதான். சாயப் பட்டறைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகப் பிரச்னைகள் எழுந்தபோது, அதற்குத் தீர்வு காண சுத்திகரிப்பு நிலையம் அமைக்கிறோம் என்று சாயப் பட்டறைகள் சார்பில் நீதிமன்றத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
 ஆனால், செலவு அதிகம் என்பதாலும் அரசு மானியம் போதுமானதாக இல்லை என்பதாலும் எதிர்பார்த்த அளவுக்கு சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முடியாத நிலை உருவாகிவிட்டது. சுத்திகரிப்பு நிலையங்களால் 85 சதவீத நீரை சுத்தம் செய்து மறுசுழற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாலும் எஞ்சியுள்ள 10 சதவீத உப்பு நீரையும், 5 சதவீத திடக்கழிவையும் என்ன செய்வது என்று தெரியாத நிலை உருவாகிவிட்டது.
 உப்பு நீரை ஆவியாக்கவும், திடக்கழிவை சிமென்ட் தயாரிப்பு, எரிகற்கள் தயாரிக்கவும் திட்டங்கள் உள்ளன. ஆனால் உப்பு நீரை மின்சாரத்தைப் பயன்படுத்தி ஆவியாக்குவதற்கு, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விசைத்தறிகளுக்கு வழங்கப்படுவதைப் போல யூனிட் ரூ.2 என்ற மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் தயாரிக்க அரசு மானியம் வழங்க வேண்டும்.
 சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களும் தண்ணீர் எளிதில் கிடைக்கும் வரைதான் செயல்பட முடியும். தற்போது ராஜஸ்தானில் ஏற்பட்டிருப்பதைப் போன்று தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அவற்றையும் மூடவேண்டியதுதான். எனவேதான் சாயசலவைத் தொழில் கூடங்கள் அடங்கிய தொகுப்புகளை (கிளஸ்டர்) கடலோரங்களில் அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறோம். கடல் நீரை சுத்திகரித்து ஆலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும் அதே நேரத்தில், இந்த ஆலைகளில் இருந்து கிடைக்கும் உப்பு நீரானது கடல் நீரின் உப்பைவிட அடர்த்தி குறைவானது என்பதால் அதை கடலில் கலந்துவிடலாம். இதனால் நிலத்தடி நீருக்கு மட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதாலும் இந்தத் திட்டத்தை நாங்கள் நிரந்தரத் தீர்வாகக் கருதுகிறோம்.
 இருப்பினும் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் வரையிலும், நாடு முழுவதிலும் சாயசலவை ஆலைகள் அதிகம் உள்ள தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் டையிங் கிளஸ்டர்கள் அமைத்து, அதில் கிடைக்கும் உப்பு நீரை பைப் லைன் அமைத்து, கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
 இதன் மூலம் தமிழகத்தில் ஒரே பைப்லைன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீரை நேரடியாக கடலில் கலக்க முடியும். இதன் மூலம் உற்பத்தி செலவில் 70 சதவீதம் வரை குறையும். இது சர்வதேச அளவில் இந்திய ஆடை ரகங்கள் போட்டியிடுவதை ஊக்குவிக்கும்.
 இது தொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை மீண்டும் வரும் 12-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம். அண்மையில் வெளியான தமிழக அரசின் ஜவுளிக் கொள்கையிலும் "பிராசசிங்' தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய - மாநில அரசுகளின் உதவியுடன் "பிராசசிங்' தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 - க. தங்கராஜா
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜவுளி ஏற்றுமதியில் மந்த நிலை
நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்
கசக்கும் கரும்பு விவசாய தொழில்
தங்கம் விலை பவுன் ரூ.28,672
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு