திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஆபத்தில் கைகொடுக்கும் தீ விபத்து காப்பீடு!

DIN | Published: 10th June 2019 02:00 AM

சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அவரவர் தகுதிக்கேற்ப, சொந்தப் பணத்தில் அல்லது வங்கி, நிதிநிறுவன உதவியோடு வீடு கட்டுகின்றனர். தொழில்புரிவோர், வணிக நிறுவனங்கள், ஆலைகள், கல்வி நிறுவனங்கள் வைத்திருப்போர் என பல்வேறு தரப்பினரும் அவரவர் தேவைக்கு ஏற்ப வங்கிகள் மூலமாக கடன்களை பெற்று தொழிலை நடத்தி வருவோம்.
 அப்படி இருக்கையில் தீ விபத்து ஏற்படுதல் போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், அதை எதிர்கொள்ளும் சக்தி இல்லாத பட்சத்தில் அவர்களால் தொழிலில் மீண்டெழவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதோடு அவர்களின் குடும்ப வாழ்க்கைச் சூழலையே ஆட்டம் காணச் செய்துவிடும்.
 இத்தகைய அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள் ஒரே வழி தீ விபத்துக் காப்பீடு எடுத்துக்கொள்வதே ஆகும்.
 தீ விபத்து காப்பீட்டின் அவசியம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பிரபல ஜவுளிக்கடை தீ விபத்தில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. அப்போது அந்த ஜவுளிக்கடை தீ காப்பீடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் அந்த நிறுவனத்தால் மீண்டெழ முடிந்தது.
 இதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சூடம் தயாரிக்கும் ஆலை, தேங்காய் நார் கழிவுகளை மூலப்பொருள்களாக கொண்டு செயல்படும் தொழிற்சாலை, கயிறு தயாரிக்கும் ஆலை போன்றவற்றில் ஏற்பட்ட தீவிபத்தில், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டபோதும், அந்த ஆலைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், அவை பொருளாதார இழப்பிலிருந்து தப்பின.
 பொதுவாக ஆலைகள், வீடுகள், கடைகள் போன்றவை தீ விபத்தால் இழப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், காப்பீடு செய்யப்பட்டிருந்தால் இழப்பீட்டுத் தொகையை பெறலாம்.
 ஆனால் காப்பீடு செய்யப்படாத நிலையில், தீ விபத்துகள் ஏற்பட்டு இழப்பீடு பெற முடியாமல் போனவர்களே ஏராளம். அதற்கு காரணம் தீ விபத்து காப்பீடு குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினரிடமும் இல்லாததே.
 அபாயக் கூறுகள்: தீ விபத்து காப்பீடு என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, தீ விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதுதான். அப்படி இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
 தீ, மின்னல், வெடிப்பு, விமானம் மூலம் ஏற்படும் சேதம், கலவரம், வன்செயல் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு, புயல், பெருங்காற்று, வெள்ளம், வெள்ளத்தில் மூழ்குதல் அல்லது அடித்துச் செல்லப்படுதல், விலங்குகளால் அல்லது வாகனங்களால் ஏற்படும் சேதம், பாறை அல்லது நிலச்சரிவு, தண்ணீர் தொட்டி மற்றும் அதன் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வெடிப்பு ஆகியவற்றால் ஏற்படும் சேதம், ஏவுகணை சோதனைகளால் ஏற்படும் சேதங்கள், தானியங்கி சிதறல் மூலம் தெளிப்புகளில் ஏற்படும் கசிவு, புதர், காடு ஆகியவற்றால் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட அபாய கூறுகளுக்காக காப்பீடு செய்து கொள்ளலாம். பூகம்பம், பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு பிரீமியம் தொகை சற்று அதிகம் செலுத்த வேண்டியது இருக்கும்.
 வணிக நிறுவனங்கள், ஆலைகளுக்கு அவசியம்: தீ விபத்து காப்பீடு, வணிக நிறுவனங்கள், ஆலைகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. வீடுகளுக்கும், வீட்டில் இருக்கும் பொருள்களுக்கும் காப்பீடு செய்யலாம்.
 தீ விபத்தில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, நகை, கடைகளில் உள்ள கணினி, பிரிண்டர் உள்ளிட்ட இயந்திரங்கள், பர்னிச்சர் பொருள்கள், தொழிற்சாலைகளில் மூலப் பொருள்கள், உற்பத்தி பொருள்கள் உள்ளிட்ட அசையும் சொத்துகளுக்கும், வீடு, ஆலைகள், தொழில் நடைபெறும் கட்டடம், கட்டடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருள்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கும் காப்பீடு செய்ய முடியும்.
 ஒரே நிறுவனம் வெவ்வேறு இடங்களில் கிடங்குகள் வைத்திருந்தாலும், அவை அனைத்தையும் ஒரே பாலிசியின் கீழ் காப்பீடு செய்ய முடியும்.
 பிரீமியம் தொகை நிர்ணயித்தல்: தீ விபத்து காப்பீட்டிற்காக செலுத்தப்படும் பிரீமியம் தொகை, கட்டடத்தின் தரம் மற்றும் அதை பயன்படுத்தும் விதம், அதில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் தன்மை, காப்பீட்டுக் காலம் ஆகியவற்றை பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது.
 உதாரணமாக, வசிக்கும் வீடு, கடைகள், ஆலைகள், விபத்து அபாயம் அதிகம் உள்ள தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு வெவ்வேறு தொகை வசூலிக்கப்படுகிறது.
 இதில், வீடு, பள்ளிகள், மருத்துவமனை, அலுவலகம், தங்கும் விடுதி, கூட்ட அரங்கு போன்றவற்றுக்கு மிகக் குறைவான பிரீமியம் தொகையே வசூலிக்கப்படுகிறது. சிலவற்றுக்கு குறிப்பிட்ட சதவீத பிரீமியம் தள்ளுபடியும் உண்டு.
 ஆபத்தான தொழில்கள் நிறைந்த வணிக வளாகங்கள், வெடிமருந்து விற்பனைக் கூடங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மர அறுவைக் கூடங்கள், சுரங்கங்கள் போன்றவற்றுக்கு பிரீமியம் தொகை சற்று கூடுதலாக இருக்கும்.
 வீடுகளுக்கு நீண்ட கால திட்டத்தில் காப்பீடு செய்யப்படுகிறது. மற்றவற்றுக்கு காப்பீட்டுக் காலம் ஒரு ஆண்டு மட்டுமே. தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
 காப்பீடு யார் பெற முடியும்?
 வீடுகள், சிறிய கடையாக இருந்தாலும் பெரிய நிறுவனமாக இருந்தாலும் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். காப்பீடு செய்யும்போது தம்முடைய சொத்து விவரங்களை அன்றைய சந்தை மதிப்புப்படி குறிப்பிட வேண்டும். அப்போதுதான் காப்பீடு எடுப்பதன் நோக்கம் சரியானதாக இருக்கும்.
 சிலர் செலுத்தும் பிரீமியம் தொகை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மதிப்பைக் குறைத்து போட்டு பெயரளவுக்கு பாலிசி எடுப்பர். அப்படிப்பட்ட சூழலில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும்.
 சில காப்பீட்டு நிறுவனங்கள் வீடுகளுக்கு காப்பீடு செய்யும் போது, அந்த வீட்டின் உரிமையாளருக்கும் வீட்டின் மதிப்பு அளவுக்கு விபத்து காப்பீடு வழங்குகிறது. இதன் மூலம் ஒரு குடும்பத் தலைவர் விபத்தால் உயிரிழந்துவிட்டாலும், அதற்கான இழப்பீட்டுத் தொகையை பெறமுடியும்.
 இழப்பீடு கோருவது எப்படி? தீ விபத்து நிகழ்ந்துவிட்டால் காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். விபத்துக்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது நல்லது.
 காப்பீட்டு நிறுவனத்தின் சர்வேயர் நிகழ்விடத்துக்கு வந்து விரிவான ஆய்வு மேற்கொள்வார். பின்னர் அவரது ஆலோசனையின் பேரில் விபத்து நடைபெற்ற பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம்.
 சர்வேயர் காப்பீட்டு நிறுவனத்துக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கும். சிலர் தொழில் நஷ்டம் காரணமாக தீவிபத்தை அவர்களாக ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரியவந்தால் இழப்பீடு கிடைக்காது.
 இதுகுறித்து அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா பொதுக் காப்பீட்டு நிறுவன முதன்மை காப்பீட்டு ஆலோசகர் ஒருவர் தெரிவித்ததாவது: நாம் கடுமையாக முயன்று சேர்க்கும் சொத்துகளான வீடு, கடைகள், அலுவலகம், சேமிப்புக் கிடங்கு, தொழிற்சாலை ஆகியவற்றுக்கும், அவற்றை சார்ந்த பொருள்களுக்கும் பல்வேறு வகைகளில் சேதங்கள், இழப்பு ஏற்படலாம். அத்தகைய இழப்புகளை ஈடுசெய்வதற்கு, தீ விபத்துக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது.
 தீ விபத்து காப்பீடு சொத்தின் உரிமையாளரால் மட்டுமே எடுக்க முடியும். முன் மொழிவு படிவத்தில் அவர்கள் கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில்தான் காப்பீடு செய்யப்படுகிறது. தவறான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் இழப்பீடு கோரும் நிலையில் பாலிசி பயனற்றதாகிவிடும்.
 விபத்து ஏற்பட்டுவிட்டால் உடனடியாக காப்பீட்டு நிறுவனம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் ஆகியவற்றுக்குத் தகவல் தர வேண்டும். அதன் பிறகு இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, தகுந்த ஆவணங்களுடன் காப்பீட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 நடுத்தர வர்க்கத்தினரை பொருத்த வரையில், விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு, வீட்டிற்கான தீவிபத்து காப்பீடு ஆகியவற்றை கட்டாயம் வைத்திருத்தல் மிக அவசியமாகிறது. தீ காப்பீடு, வாகனக் காப்பீட்டில் அன்றைய சந்தை மதிப்பை சரியாக குறிப்பிடுவது மிகச் சிறந்தது என்றார் அவர்.
 - வை. இராமச்சந்திரன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜவுளி ஏற்றுமதியில் மந்த நிலை
நலிவடைந்து வரும் முந்திரி வர்த்தகம்
கசக்கும் கரும்பு விவசாய தொழில்
தங்கம் விலை பவுன் ரூ.28,672
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு