தொடர்ந்து 6 நாள்கள் சரிவைக் கண்டு வந்த பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஏற்றத்தைக் கண்டன.
நிறுவனங்களின் மந்தமான முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றது, சாதகமற்ற சர்வதேச நிலவரங்கள் ஆகியவை பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையிலும், அடுத்த இரண்டு வாரங்களில் மழைப்பொழிவு சராசரிக்கும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை சுணக்கமாக இருந்த பங்கு சந்தையில் சிறிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையில், மோட்டார் வாகனம், வங்கி, பொறியியல் பொருள்கள், மருந்து, நிதி, நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 1.98 சதவீதம் வரை உயர்ந்தன.
இருப்பினும், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண்கள் 1.01 சதவீதம் வரை குறைந்தன.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் யெஸ் வங்கி பங்கின் விலை 9.64 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 7.20 சதவீதமும் அதிகரித்தன. ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், கோட்டக் வங்கி பங்கின் விலை 3.21 சதவீதம் வரை உயர்ந்தன.
வேதாந்தா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 4.26 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்ந்து 37,882 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 32 புள்ளிகள் அதிகரித்து 11,284 புள்ளிகளாக நிலைபெற்றது.