இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடஃபோன் ஐடியாவின் இழப்பு முதல் காலாண்டில் ரூ.4,873.9 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் இழப்பு ரூ.4,881.9 கோடியாக காணப்பட்டது.
வோடஃபோன் குழுமம்-ஐடியா செல்லுலார் இணைப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் 31-இல் நிறைவடைந்ததையடுத்து, இந்த நிதி நிலை முடிவுகளை கடந்தாண்டு ஜூன் மாத காலாண்டுடன் ஒப்பிட இயலாது. எனவேதான், முதல் காலாண்டு முடிவுகள் நான்காவது காலாண்டு முடிவுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.11,775 கோடியாக காணப்பட்ட நிறுவனத்தின் வருவாய் ஜூன் காலாண்டில் ரூ.11,269.9 கோடியாக குறைந்துள்ளது.
உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.25,000 கோடி திரட்டி கொள்ளும் நடைமுறையை நிறுவனம் முடித்துக் கொண்டுள்ளது என செபியிடம் வோடஃபோன் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜியோவின் கடுமையான போட்டியை அடுத்து, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 33.41 கோடியாக காணப்பட்ட வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 32 கோடியாக சரிந்துள்ளது.