நூல் விலை உயர்வு: ரூ.1000 கோடி ஜவுளி தேக்கம்

​நூல் விலை உயர்வு காரணமாக துணி விற்பனை மந்தமடைந்துள்ளதால் பல்லடம் பகுதியில் ரூ. 1000 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.
நூல் விலை உயர்வு: ரூ.1000 கோடி ஜவுளி தேக்கம்


நூல் விலை உயர்வு காரணமாக துணி விற்பனை மந்தமடைந்துள்ளதால் பல்லடம் பகுதியில் ரூ. 1000 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.

மேலும்  துணி உற்பத்தியை பாதியாக குறைக்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பல்லடம் பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தினமும் ரூ. 8 கோடி மதிப்புள்ள 2 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழில் மூலம் நேரடியாக 1லட்சம் பேரும் மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். 

கடந்த 5 மாதங்களாக கேம்பர் பஞ்சு ஏற்றுமதி அதிகரிப்பால் உள்நாட்டில் விசைத்தறி துணி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நூலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும் மக்களவைத் தேர்தல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பணப்புழக்கம் குறைந்தது. வட மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் டையிங் பணி பாதிப்படைந்துள்ளது.

சர்வதேச அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் துணி விற்பனை சந்தையில் மந்த நிலை ஏற்பட்டது. ஒரு மீட்டர் துணி உற்பத்திக்கு ரூ. 35 முதல் ரூ. 40 வரை செலவு ஆன நிலையில் துணி வர்த்தகர்கள் ஒரு மீட்டர் துணியை ரூ.30 முதல் ரூ.32-க்கு கொள்முதல் செய்ய முன்வந்தனர். உற்பத்தி செலவுக்கேற்ப துணி விற்பனை விலை இல்லாததால் துணி உற்பத்தி குறைந்தது.

இதன் காரணமாக பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களின் கிடங்கில் ரூ. 1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன. விலையில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஜவுளி உற்பத்தியை மேலும் குறைக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் எஸ்.முருகேசன் கூறியதாவது:
கேம்பர் பஞ்சு விலை உயர்வு, வட மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் டையிங் ஆலைகளில் துணி சலவை செய்ய முடியாத நிலை, சர்வதேச அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் பகுதியில் ரூ. 1,000 கோடி மதிப்பிலான உற்பத்தி செய்யப்பட்ட 20 கோடி முதல் 25 கோடி மீட்டர் துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் துணி உற்பத்தி குறைந்துள்ளது. வாரத்தில் இரண்டு நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கும் வருமானம் குறைந்துள்ளது.

பல்லடம் பகுதியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் விலை குறைவாக துணியைத் தருவதால் நம்நாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழில் நலிவடைந்த நிலையில் இருப்பதால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் மற்றும் வட்டி சலுகை அளிக்க  வேண்டும். 

சிந்தெடிக் நூல் கொள்முதல் செய்யும்போது 12 சதவீதம் வரி செலுத்தி வாங்கி, அதனை துணியாக உற்பத்தி செய்து 5 சதவீதம் வரி விதித்து விற்பனை செய்யப்படுகிறது. 

இதில் வித்தியாசமான 7 சதவீதம் வரி ஜி.எஸ்.டி. தாக்கல் செய்து அதன் பின்னரே திரும்ப கிடைக்கிறது. இத்தொகை கிடைக்க கால தாமதம் ஆகிறது. வணிக வரித் துறையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை ரிட்டர்ன் தாக்கல் செய்து நிலுவைத் தொகை இருப்பின் உடனடியாக கணக்கு முடித்து தந்தால் உதவியாக இருக்கும். மேலும் காட்டன் நூல் கொள்முதலில் 5 சதவீதம் வரி விதிக்கப்படுவது போல சிந்தெடிக் நூல் கொள்முதல் செய்யும்போது வரியைக் குறைத்து வசூலித்தால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

அதிக அளவில் ஜவுளி உற்பத்தி செய்யப்படும் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மையப் பகுதியான பல்லடத்தில் ஜவுளி சந்தை ஏற்படுத்த வேண்டும். துணிக்கு விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்க வேண்டும். பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு குடியிருப்பு வசதி செய்து தர வேண்டும். விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க விசைத்தறியாளர்களின் வங்கிக் கடனை வட்டியுடன் தள்ளுபடி செய்து விசைத் தறியாளர் குடும்பங்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com