வர்த்தகம்

புதிய விமான சேவைகளால் பெருகும் புதுவையின் சுற்றுலா வருவாய்!

22nd Jul 2019 03:15 AM | - பீ.ஜெபலின் ஜான்

ADVERTISEMENT

 

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து  புதுச்சேரிக்கு சுற்றுலா வர  புதிய விமான சேவைகள் பெரிதும்  உதவுகின்றன. தொழில் ரீதியாக பிற மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும் இந்த விமான சேவை மிகவும் வசதியாக இருக்கிறது. இதனால், புதுவை சுற்றுலாத் துறை, தொழில்துறை உத்வேகம் பெறும். 

புதுவையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு புதிய விமான சேவை பெருகி வருவதால், புதுவை அரசுக்குக் கிடைக்கும் சுற்றுலா வருவாய் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுவைக்கு நிதி ஆதாரமாக இருப்பது சுற்றுலாத் துறை. இந்த குட்டி மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை,   புராதான கோயில்கள், பிரெஞ்சு கலாசாரத்தை பிரதிபலிக்கும் கட்டடங்கள் உள்ளிட்டவை உள்நாடு மட்டுமன்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நிகழாண்டு புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது புதுவை அரசின் புள்ளி விவரம்.

மேலும், வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விமான சேவையை விரிவாக்கம் செய்ய புதுவை அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

புதுவையைப் பொருத்தவரை புதுச்சேரி லாசுப்பேட்டையில் மட்டுமே விமான நிலையம் உள்ளது. இங்கு, முதல் விமான சேவை 7.1.2013 அன்று தொடங்கப்பட்டது. இந்த விமான நிலையத்துக்கு முதல் விமானம் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் இயக்கப்பட்டது. பின்னர், ஏர் இந்தியா நிறுவனம் மூலம் புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை தொடங்கப்பட்டது.   இருப்பினும், போதிய வரவேற்பு இல்லாததால் இந்தச் சேவைகள் சிறிது காலத்திலேயே நிறுத்தப்பட்டது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் சிறு நகரங்களில் விமான சேவையை அதிகரிக்கும் வகையில், புதிய விமான கொள்கையை அறிவித்தது. அதன்படி "உதான்' திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதிக் கட்டணத்தை  மத்திய அரசே ஏற்கும் என அறிவித்தது.

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான அரசு, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கையில் இறங்கியது.  இதையடுத்து, கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி - ஹைதராபாத் இடையே விமான சேவையைத் தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருவுக்கு விமான சேவையைத் தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி, கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. தினமும் மதியம் 12.50-க்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 1.40 மணிக்கு பெங்களூருக்கு இந்த விமானம் செல்கிறது.  இதேபோல, ஹைதராபாத்தில் இருந்து தினமும் காலை 9.45 மணிக்கு புறப்படும் விமானம்,   புதுச்சேரிக்கு 11.25-க்கு வந்தடைகிறது. தினமும் 11.45-க்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், ஹைதராபாத்துக்கு 1.20 மணிக்கு சென்றடைகிறது.

இதைத் தொடர்ந்து, ஜூலை 15-ஆம் தேதி முதல் சென்னை, சேலத்துக்கு புதிய விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டு, ஏர் ஒடிஸா நிறுவனம் முன் பதிவைத் தொடங்கியது.

சென்னையில் இருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் விமானம், காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என்றும், பகல் 1.15-க்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் பிற்பகல் 2 மணிக்கு சென்னையைச் சென்றடையும் என்றும், இதேபோல, காலை 9.10-க்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும் என்றும், மீண்டும் பகல் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, பகல் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

முன் பதிவு தொடங்கப்பட்ட நிலையில், இந்த விமான சேவைத் திட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சேவையைத் தொடங்க புதுவை அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதுகுறித்து புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது: 

புதுச்சேரியில் இருந்து கொச்சி, திருப்பதி, கோவை நகரங்களுக்கு விரைவில் விமான சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து முதல் முறையாக தாய்லாந்துக்கு அக்டோபர் 10-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்தின் ஓடு தளம் விஸ்தாரமாக இல்லாததால், நேரடியாக வெளி நாடுகளுக்கு விமானத்தை இயக்க முடியாது. இதனால், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி, அங்கிருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காங்குக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை 11.15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் ஹைதராபாத் விமானம், அங்கு, பாங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பாங்காக் சென்றடையும்.

இதேபோல, இரவு 10.40 மணிக்கு பாங்காங்கில் இருந்து புறப்பட்டு ஹைதராபாத் வந்து, அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையலாம்.

புதுச்சேரி - ஹைதராபாத், பெங்களூரு இடையிலான விமான சேவை வர்த்தக ரீதியாக வெற்றி அடைந்துள்ளது. இந்த விமானங்களில் 94 சதவீத இருக்கைகள் நிரம்பி விடுகின்றன. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வர இந்த விமான சேவைகள் பெரிதும் உதவுகின்றன. தொழில் ரீதியாக பிற மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கும் இந்த விமான சேவை மிகவும் வசதியாக இருக்கிறது. இதனால், புதுவை சுற்றுலாத் துறை, தொழில்துறை உத்வேகம் பெறும். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேலம், சென்னை விமான சேவைகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார் அவர்.

புதுச்சேரியில் இருந்து பிற மாநில சேவைகள்

புதுச்சேரியில் இருந்து தில்லி, மும்பை,  கோவாவுக்கு இணைப்பு விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கியது.

புதுச்சேரியில் இருந்து காலை 11.45 மணிக்கு ஹைதராபாத்துக்கு விமானம் செல்கிறது. அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் மாலை 6.35 மணிக்கு கோவாவுக்குச் செல்ல முடியும்.  இதேபோல, ஹைதரபாத்தில் இருந்து புறப்படும் மற்றொரு இணைப்பு விமானம் மூலம் புது தில்லிக்கு இரவு 11.45 மணிக்கு சென்றடையலாம். மேலும், புதுச்சேரியில் இருந்து தினமும் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் விமானம் பெங்களூருக்கு சென்றடையும். அங்கிருந்து புறப்படும் விமான மூலம் மும்பைக்கு மாலை 5 மணிக்கு சென்றடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT