ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,104 கோடி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் ரூ.10,104 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.10,104 கோடி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் ரூ.10,104 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளதாவது: 

சில்லறை வர்த்தகம், தொலைத் தொடர்பு சேவை பிரிவிலான நிறுவனங்களின் வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறப்பான அளவுக்கு உயர்ந்தது. இது, பாரம்பரியமாக வருவாய் தரும் பிரிவுகளாக கருதப்பட்ட பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு துறை மந்த நிலையை எதிர்கொள்ள பெரிதும் உதவியது.

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால அளவில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.1,72,956 ,கோடி வருவாய் ஈட்டியது. நிகர லாபம் ரூ.9,459 கோடியிலிருந்து 6.8 சதவீதம் அதிகரித்து ரூ.10,104 கோடியானது.  

சில்லறை வர்த்தகத்தின் மூலம் கிடைத்த வருவாய் 47.5 சதவீதம் உயர்ந்து ரூ.38,196 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபம் 70 சதவீதம் அதிகரித்து ரூ.2,049 கோடியாகவும் காணப்பட்டது. முதல் காலாண்டில் 229 புதிய கடைகள் திறக்கப்பட்டதன் மூலம் அங்காடிகளின் மொத்த எண்ணிக்கை 10,644-ஐ எட்டி வலுப்பெற்றுள்ளது. அதேபோன்று, ரிலையன்ஸ் ஜியோ மூலம் கிடைத்த நிகர லாபம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 45.6 சதவீதம் அதிகரித்து ரூ.891 கோடியைத் தொட்டது. மார்ச் காலாண்டில் 30.67 கோடியாக இருந்த ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜூன் காலாண்டில் 33.12 கோடியாக உயர்ந்தது.

பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய வரிக்கு முந்தைய லாபம் 4.4 சதவீதம் சரிந்து ரூ.7,508 கோடியாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக கிடைக்கும் வரிக்கு முந்தைய லாபம் 15.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.4,508 கோடியாகவும் இருந்தது.

முக்கிய முதலீட்டு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையடைந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கான கடன் தொகை ரூ.2,87,505 கோடியிலிருந்து ரூ.2,88,243 கோடியாக உயர்ந்துள்ளது. ரொக்க கையிருப்பு ரூ.1,33,027 கோடியிலிருந்து ரூ.1,31,710 கோடியாக குறைந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com