வர்த்தகம்

பணவீக்கம் 2.02 சதவீதமாக குறைந்தது

16th Jul 2019 12:57 AM

ADVERTISEMENT


நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 23 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
இப்பணவீக்கம் முந்தைய மே மாதத்தில் 2.45 சதவீதமாகவும், கடந்த 2018 ஜூன் மாதத்தில் 5.68 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.
மே மாதத்தில் 6.99 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 6.98 சதவீதமாக குறைந்தது.
காய்கறிகளுக்கான பணவீக்கம் 33.15 சதவீதத்திலிருந்து சரிந்து 24.76 சதவீதமாக குறைந்துள்ளது. உருளைக்கிழங்கிற்கான பணவீக்கம் -23.36 சதவீதத்திலிருந்து -24.27 சதவீதமானது.
இருப்பினும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மே மாதத்தில் 15.89 சதவீதமாக காணப்பட்ட அதற்கான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 16.63 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017-ஜூலையில் தான் பொதுப் பணவீக்கமானது 1.88 சதவீதமாக மிகவும் குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டு ஜூனில்தான் பொதுப் பணவீக்கம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்கம் 3.07 சதவீதம் என தற்காலிக மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அது 3.24 சதவீதமாக அதிகரித்து மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT