செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

எத்தனால் எரிபொருளில் இயங்கும் முதல் பைக்: டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்

DIN | Published: 13th July 2019 01:13 AM
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் எத்தனால் பைக்கை தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கும் சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 


டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் முதல் எத்தனால் டிவிஎஸ் அப்பாச்சி பைக் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இப்புதிய பைக்கை சந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் வேணு ஸ்ரீநிவாஸன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ100' பைக்கை நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.2 லட்சமாகும். 
எத்தனால் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள கரும்பு அதிகம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்திலிருந்து இப்புதிய வகை மோட்டார்சைக்கிளின் விற்பனை தொடங்கப்படவுள்ளது. 
இந்தியாவில், தற்போதைய நிலையில் எத்தனால் எரிபொருள் நிலையங்கள் எங்கும் அமைக்கப்படவில்லை. இருப்பினும், எத்தனால் எரிபொருள் நிரப்பும் மையங்களை திறக்குமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தை மத்திய நிதி அமைச்சர் கேட்டுக் கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்சாரம், ஹைபிரிட்' உள்ளிட்ட மாற்று எரிபொருளை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய  இருசக்கர வாகன துறை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், எத்தனால் பைக்குகள் எங்களின் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகரிப்பு
ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம் மாற்றமின்றி 1.08 சதவீதமாக நீடிப்பு
நூலிழை உற்பத்தி 5-8 சதவீதம் குறையும்
சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சி
தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு