வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

வணிகப் பயன்பாட்டுக்கு வரும் ஆளில்லா விமானங்கள்!

DIN | Published: 01st July 2019 03:00 AM

ஸொமாட்டோ, ஸ்விகியில் நாம் ஆர்டர் செய்யும் உணவு இனி நம் வீட்டு மொட்டை மாடிக்கே பறந்து வந்து இறங்கும் காலம் நெருங்கிவிட்டது. ஆம், ட்ரோன்கள் எனப்படும் சிறுரக ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு விநியோகம் செய்யும் முயற்சியில் ஸொமாட்டோ இறங்கியுள்ளது. உணவு விநியோகம் மட்டுமன்றி வேளாண்மை, மருத்துவம், சுரங்கம், பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளிலும் ட்ரோன்களை பயன்படுத்தும் ஆராய்ச்சியை இந்தியாவில் பல நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
இது ஸ்டார்ட்அப்களுக்கான காலம். புதுப்புது சிந்தனைகளுடன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சேவைகளைச் செய்யக் கூடிய திட்டங்கள் அமோக வெற்றி பெற்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு லாபத்தையும் அள்ளித் தருகின்றன. 
அந்த வகையில், சிறுரக ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு, இவற்றின் செயல்பாடுகள் ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் இன்னும் இரு ஆண்டுகளில் இவற்றில் பாதியளவு செயல்பாட்டுக்கு வரும் என்கிறது அன்எர்த்இன்சைட் நிறுவனம்.
சிறுரக ஆளில்லா விமானங்களைப் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் அவற்றை வணிகரீதியாகப் பயன்படுத்தும் முறைக்கு இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடந்த ஆண்டு டிசம்பரில் அனுமதி அளித்தது. 
சிறுரக ஆளில்லா விமானங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் சோதனை முறையில் செயல்படுத்திப் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை உள்ளது. 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சிலிகான்வேலியை தளமாகக் கொண்ட ஷிப்லைன், மருந்துப் பொருள்கள் டெலிவரி நிறுவனமான ரெட்விங், உணவு விநியோக ஸ்டார்ட்அப் நிறுவனங்களான ஸொமோட்டோ, ஸ்விகி, மின்னணு வர்த்தக நிறுவனமான அமேஸான், வாடகை கார் நிறுவனமான உபேர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
சோதனை வெற்றி: ஸொமாட்டோ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு விநியோகிக்கும் சோதனையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக முதலில் லக்னௌவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டெக் ஈகிளை கடந்த ஆண்டு வாங்கிய ஸொமாட்டோ, அதன்மூலம் தனது சிறுரக ஆளில்லா விமானத்தை உருவாக்கியது. 
அதன் மூலம் டெலிவரி சோதனையை சில நாள்களுக்கு முன்பு வெற்றிகரமாக செயல்படுத்தியதாகவும் அறிவித்தது. இந்த ஆளில்லா விமானம், 5 கிலோ எடை கொண்ட உணவு பார்சலை, மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பறந்து 5 கி.மீ. தொலைவைக் கடந்து 10 நிமிடத்தில் கொண்டுசேர்த்தது. 
"முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு கருதி ரிமோட் மூலமே இந்த ட்ரோன் இயக்கப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் உணவு விநியோகம் என்பது இனி வெறும் பகல்கனவாக இருக்கப் போவதில்லை' என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஸொமாட்டோ தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல்.
போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் மோட்டார் சைக்கிள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய ஸொமாட்டோ இப்போது 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆளில்லா விமானம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தப் பயண நேரம் பாதியாகக் குறையும்.
இதேபோல உத்தரகண்டில் தெஹ்ரி மாவட்டத்தில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஆளில்லா விமானம் மூலம் ஒரு யூனிட் ரத்தத்தை ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் சோதனையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. 18 நிமிடத்தில் குறிப்பிட்ட இலக்கை அந்த ட்ரோன் சென்றடைந்தது. சாலை வழியாகச் சென்றால் சுமார் 50-60 நிமிடங்கள் ஆகும்.
சவால்கள்: ஆளில்லா விமானங்களை உணவு விநியோகத் துறை மட்டுமன்றி பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்கு பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் முக்கியமானது பாதுகாப்பு. டிரோன்களை பல்வேறு சதிச் செயல்களுக்கும் பயன்படுத்த முடியும் என்பதுதான் இதற்குக் காரணம். 
இப்போதே டிரோன்களை இயக்குவதற்கு பல்வேறு கடுமையான விதிமுறைகளை பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உருவாக்கியிருந்தாலும், எதிர்காலத்தில் வணிகரீதியான பயன்பாட்டுக்கு ட்ரோன்களின் பெருக்கம் அதிகரிக்கும்போது நிறைய சிக்கல்களை அரசின் பல்வேறு பாதுகாப்புத் துறைகள் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த சிறுரக விமானங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுமா, அது சாத்தியமா, தனிநபர்கள் அவற்றை முறைகேடாக இயக்குவதை தடுப்பது எப்படி - என்பது போன்ற பல சிக்கல்கள் உள்ளன. இவை அனைத்தும் களையப்படும்போதுதான் வணிகரீதியான ட்ரோன் இயக்கத்தின் வெற்றி தெரியவரும்.
மற்றொரு விஷயம் வேலைவாய்ப்பு. டிரோன்களின் வெற்றி அதிகமாகும்போது சில வகை டெலிவரி வேலைவாய்ப்புகள் குறையக்கூடும். அதேவேளையில் இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதுப்புது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்போது, புது வகையான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதையும் மறுக்க இயலாது.
யு.ஏ.வி. பலவிதம்
இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளின்படி, 5 வகையான ஆளில்லா விமானங்களுக்கு (யு.ஏ.வி.) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அவை குறுகிய (nano), நுண்ணிய (micro), சிறிய (small), நடுத்தர (medium), பெரிய (large) ஆகியவையாகும். இவை முறையே 250 கிராம், 250 கிராம்- 2 கிலோ, 2 கிலோ - 25 கிலோ, 25 கிலோ -150 கிலோ, 150 கிலோவுக்கு மேல் என்கிற எடையளவில் இருக்கும்.
வெளிநாடுகளில்...
ஐரோப்பிய யூனியனில் 2025-க்குள் 4 லட்சம் வணிகரீதியான டிரோன்கள் பயன்பாட்டில் இருக்கும்.
அமெரிக்காவில் 2018-22இல் டிரோன் சந்தையானது 11.61 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும்.
டிரோன் தயாரிப்பில் சீனாவை சேர்ந்த டிஜெஐ, ஜீரோ டெக், யுனீக் ஆகிய நிறுவனங்கள் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளன.
எங்கெல்லாம் அனுமதி இல்லை?
இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் டிரோன் கொள்கையில் பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, டிரோனை இயக்குபவருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் டிரோன் தொடர்பான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும்.
டிரோன்களை கண்டிப்பாக பகல் நேரத்தில்தான் இயக்க வேண்டும். மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் விமான நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன்களை இயக்க அனுமதி இல்லை. மற்ற நகரங்களில் இந்த விதிமுறை 3 கி.மீட்டராக குறையும். சர்வதேச எல்லையையொட்டி 25 கி.மீ. தொலைவுக்கு இயக்கக் கூடாது. கடலுக்குள் 500 மீட்டரை தாண்டி டிரோன்கள் பறக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உள்ளன.

- எஸ். ராஜாராம்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது
எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு