நெருக்கடியில் "ரிக்' தொழில்

ரிக் தொழிலை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த திருச்செங்கோடு ரிக் தொழில், இப்போது உள்நாட்டுக்குள் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் திணறி வருகிறது. 
நெருக்கடியில் "ரிக்' தொழில்

ரிக் தொழிலை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த திருச்செங்கோடு ரிக் தொழில், இப்போது உள்நாட்டுக்குள் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் திணறி வருகிறது. இதனால், இந்த தொழிலின் விரிவாக்கம் ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டது.
 ஒரு சிறிய நகரம் நாட்டின் அனைத்துப் பகுதிகளோடும் இந்த அளவுக்குத் தொடர்பு கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். திருச்செங்கோடு என்ற சிறிய நகரத்தில் உள்ள ரிக் உரிமையாளர்களுக்கு, பல இந்திய மாநிலங்களில் ஏன், பல ஆப்பிரிக்க நாடுகளில் கூட மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. திருச்செங்கோடுதான் நாட்டின் ரிக் போர்வெல் தலைநகரம். இந்த ரிக் இயந்திரங்களால் தரைக்குக் கீழே 2,000 அடி ஆழம் வரை துளையிட முடியும். இவை, இந்தியா முழுவதும் அனைத்து மாதங்களிலும் ஆழ்துளையிட்டுக் கொண்டே இருக்கின்றன.
 ஒரு வாகனத்தில் ஒரு மேலாளர், இரு டிரில்லர்கள், இரு ஓட்டுநர்கள், ஒரு சமையல்காரர், 12 உடல் உழைப்புக் தொழிலாளர்கள் உள்ளனர். ரிக் ஆபரேட்டர்களுக்கு (உரிமையாளர்கள்) இந்தியா முழுவதும் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் பிகார், ஒரிஸா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலத் தொழிலாளர்கள் அன்றாடக் கூலிகளாக அமர்த்தப்படுகிறார்கள். இதனால் ஒரு ரிக் குழுவில் பல மாநிலத்தவர்களும் உள்ளனர்.
 இப்போது கடந்த 3 ஆண்டுகளாக நவீன தொழில்நுட்பம் காரணமாக ரிக் வாகனத்தில் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்துள்ளது. நிலத்தைத் தோண்டுதல், ஹெமரைப் பொருத்துதல், ராடுகளை அடுக்குதல் உள்ளிட்ட பணிகள் ரிமோட் மூலம் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் புகை, தூசி, வெயில் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்கள் தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இது ஒரு கடினமான வேலை. நிலத்தின் கடினத் தன்மைக்கு ஏற்ப கட்டணம் வேறுபடுகிறது. ஆந்திரம், ஒரிஸா போன்ற மாநிலங்களில் நிலம் கடினத்தன்மை கொண்டதாக இருக்கும். அங்கு ஒரு மணி நேரத்துக்கு 80 அடிக்கு மேல் துளையிட முடியாது. அதனால், ஓர் அடிக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 1,000 அடி துளையிட்டால் ரூ. 1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கிடைக்கும். நிலம் மென்மையாக இருந்தால் மணிக்கு 120 அடி வரை துளையிட முடியும்.
 8,000 ரிக் வாகனங்கள்:
 திருச்செங்கோட்டில் ரிக் தொழில் கடந்த 1965-ல் தான் தொடங்கியது. இந்தத் தொழிலுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த இப் பகுதி மக்கள் குழுவாகச் சேர்ந்து இந்த தொழிலைத் தொடங்கினர். அப்போதெல்லாம் 200 அடியிலேயே தண்ணீர் வந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் தண்ணீர் கீழே இறங்கிவிட்டது என்கின்றார் ரிக் உரிமையாளர்கள்.
 வறண்ட இப் பகுதியின் நிலையும் வறட்சியும்தான் விவசாயத்துக்கு மாற்றாக இந்த தொழில் வளர காரணமாகும். ஆனால், விவசாயத்துக்குத் தேவையான பாசன நீரில் மூன்றில் இரண்டு பங்கும், குடிநீர்த் தேவையில் ஐந்தில் ஒரு பங்கும் இந்த ரிக் இயந்திரம் மூலமாகத்தான் கிடைக்கின்றன.
 இப்போது திருச்செங்கோட்டில் மட்டும் 8,000 ரிக் வண்டிகள் உள்ளன. இங்குள்ள பலரும் வெளி மாநிலங்களில் பதிவு செய்து தொழில் செய்து வருகின்றனர். தவிர, ஆப்பிரிக்க நாடுகள், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர்கள் கப்பல்களில் ரிக் லாரிகளை எடுத்துச் சென்று தொழில் செய்து வருகின்றனர்.
 இந்தியாவைப் பொருத்தவரை சரியான கணக்கெடுப்பு இல்லை என்ற போதிலும், பல்வேறு சங்கங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ததில் இதுபோன்ற மற்ற ஆபரேட்டர்களையும் (உரிமையாளர்கள்) சேர்த்தால் வாகனங்களின் எண்ணிக்கை 20,000 வரை இருக்கலாம்.
 டீசல் விலையேற்றம், ஜிஎஸ்டியால் சிக்கல்:
 டீசல் விலையேற்றம், 18 சதவீதம் ஜிஎஸ்டியால் இந்தியாவில் இந்த தொழிலைச் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்கிறார் ரிக் லாரி உற்பத்தியாளர் மற்றும் உரிமையாளரான திருச்செங்கோட்டைச் சேர்ந்த என்.குணசேகரன் (படம்).
 டீசலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதில் முக்கியமானது போர்வெல் தொழில். ஆனால், நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால், தொழிலில் கடும் இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவிடம் இருந்து டீசலை வாங்கும் நேபாளத்தில் லிட்டர் ரூ.53-க்கும், வங்க தேசத்தில் ரூ.38-க்கும் விற்கப்படுகிறது. ஆனால், இங்கு மட்டும் டீசல் ரூ.65-க்கு விற்கப்படுகிறது. மேலும், போர்வெல்லுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. வங்கியில் கடன் வாங்கி 1 சென்ட் மற்றும் 2 சென்ட் அளவுகளில் வீடு கட்டும் மக்களிடம் எப்படி ஜிஎஸ்டி வசூலிக்க முடியும்?
 மேலும், போர்வெல் அமைக்கும் பல இடங்களில் தண்ணீர் வருவது இல்லை. அவர்கள் எப்படி ஜிஎஸ்டி தருவார்கள். இதுபோன்ற பல முரண்பாடுகள் இந்தத் தொழிலில் உள்ளன.
 தற்போது கடும் நஷ்டத்தில் தொழில் உள்ளது. ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவதில் கூட சிரமம் உள்ளது. எனவே, போர்வெல் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். போர்வெல் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றார்.
 சுருங்கிய தொழில் விரிவாக்கம்:
 டீசல் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, போர்வெல் போட விதிக்கப்பட்டுள்ள அரசின் கட்டுப்பாடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாடு போன்றவற்றால் தொழிலைத் தொடர்ந்து செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பங்குதாரர்கள் சுமார் 1,000 பேர் வரை தொழிலை விட்டு விலகி உள்ளனர். மேலும், பலர் ரிக் வண்டியை குத்தகைக்கு விட்டுள்ளனர்.
 கடந்த 5 ஆண்டுகளில் ரிக் தொழிலின் விரிவாக்கம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் இருந்தும் திருச்செங்கோடு வந்து தான் ரிக் லாரியை வாங்கிச் செல்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 200 ரிக் லாரிகள் வரை உற்பத்தியாகும். ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து, கடந்த ஆண்டில் 20 லாரிகள் என்ற எண்ணிக்கைக்கு குறைந்துவிட்டது என்கின்றனர் ரிக் லாரி உற்பத்தியாளர்கள்.
 தொழில் சீரடைய...
 ஆண்டு மழையளவைக் கணக்கிட்டு, ஆய்வு மேற்கொண்டு நிலத்தடி நீர் உள்ள பகுதிகள் குறித்து அரசு ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதன் மூலம் விவசாயத்துக்கு போர்வெல் அமைக்கும் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், டீசல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிர்ணயம் செய்யவும், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்கான போர்வெல் அமைக்க ஜிஎஸ்டியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.
 கர்நாடகத்தில் சாலை வரி ஆண்டுக்கு ரூ.3,500 மட்டுமே வசூல் செய்யப்படும் நிலையில், தமிழகத்தில் ரூ.12,500 நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற வட்டார போக்குவரத்து அலுவலக நடைமுறைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்திடவும் அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். இத்தகைய மாற்றங்களுக்கு முன்னெடுக்கப்பட்டால் திருச்செங்கோடு ரிக் தொழிலின் அடையாளமாக தொடர்ந்து நீடிக்கும். மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 3 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ரிக் உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள்.
 -கே.விஜயபாஸ்கர்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com