நிதி நிறுவனங்களில் கடன் பெற ...கிரெடிட் ஸ்கோர்-ஐ 800ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்

நிதி நிறுவனங்களில், வீட்டுக் கடன் , கார் கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் கடன், தனிநபர் கடன், தொழில்கடன் என
நிதி நிறுவனங்களில் கடன் பெற ...கிரெடிட் ஸ்கோர்-ஐ 800ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்

நிதி நிறுவனங்களில், வீட்டுக் கடன் , கார் கடன், வீட்டு உபயோகப் பொருள்கள் கடன், தனிநபர் கடன், தொழில்கடன் என எந்த வகையான கடன்களை கேட்டு நாம் விண்ணப்பித்தாலும், முதலில் ஆய்வு செய்யப்படுவது நமது கிரெடிட் ஸ்கோர் தான்.

எத்தகைய சொத்து அடமானமாகக் கொடுத்தாலும் கூட, கிரெடிட் ஸ்கோர் போதுமான அளவுக்கு இல்லையென்றால் நமது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

நம்நாட்டில் எக்ஸ்பீரியன், சிபில், ஹைமார்க், ஈக்விஃபேக்ஸ் என நான்கு கிரெடிட் தகவல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் பல்வேறு கடன் வாங்குபவர்களைப் பற்றியும், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களைப் பற்றியும் தகவல்களை சேகரித்து பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை.

இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்களில் நாம் வாங்கும் கடன்கள், அவற்றை திருப்பிச் செலுத்தும் விதம் என அனைத்தும் இவற்றால் பராமரிக்கப்பட்டு நமக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் தெரியாத பலர், வங்கிகள், நிதிநிறுவனங்களின் கவர்ச்சியான விளம்பரங்களுக்கு அடிமையாகி, கடன்களையும், கிரெடிட் கார்டுகளையும் தாராளமாக வாங்கிவிட்டு, பின்னர் அதை சரிவர திரும்பச் செலுத்தாமல் கிரெடிட் ஸ்கோரில் பின்தங்கி, கடைசியில் புதிதாக எந்த வகையான கடன்களையும் வாங்கும் தகுதியை இழந்து வாடுகின்றனர். இத்தகைய சூழலில் தான் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சிபில்: கிரெடிட் ஸ்கோர் என்றாலே தற்போது பரவலாக பேசப்படுவது சிபில் ஸ்கோர் தான். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பெற்றவர்கள் பற்றிய தகவலையும், அவர்கள் அதை திருப்பிச் செலுத்துவது பற்றிய தகவலையும் இந்த அமைப்பிற்கு தெரிவிக்கும். அதை இந்த அமைப்பு சேகரித்து வைக்கும்.

இதன் மூலம் ஒருவர் வாங்கியுள்ள கடன்களைப் பற்றியும், அதை திருப்பிச் செலுத்தும் அவரது திறனைப் பற்றியும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
சிபிலை பொருத்தளவில் ஒரு நபருக்கு 300 முதல் 900 வரை ஸ்கோர் எனப்படும் மதிப்பெண்களை வழங்குகிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் மதிப்பெண்கள் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்கப்படும்.
700 முதல் 800 வரை இருந்தால் போதிய ஆவணங்களை பெற்று வங்கி, நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கும். மதிப்பெண் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின்னரே கடன் வழங்கப்படும். மதிப்பெண் 600-க்கும் கீழ் இருந்தால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்க வாய்ப்பு கிடையாது.
விண்ணப்பதாரரின் ஸ்கோர் சான்றிதழில் என்.ஏ. அல்லது என்.ஹெச். என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள். அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.

சிபில் ஸ்கோர் குறைய காரணங்கள்: கடன் தவணைத் தொகையை தாமதமாக செலுத்துதல் முக்கிய காரணமாகும். தவணை நாளைத் தாண்டி, பின்னர் தாமதமாக செலுத்தும் ஒவ்வொரு நாளும் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடன் வாங்குபவரின் சம்பளத் தொகையில் 60 சதவீத அளவே, மாத தவணை இருக்கும் வகையில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். அதையும் தாண்டி வெவ்வேறு நிறுவனங்களில் கடன் வாங்கினால் அது ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்தல், கணக்கில் பணம் இல்லாமல் வங்கிக் காசோலை (செக் ரிட்டர்ன்) திரும்புதல் போன்றவையும் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தவிர்க்க வேண்டியது: வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து, தனிநபர் கடன் குறைவாக இருந்தால், ஸ்கோர் பாதிக்கப்படாது. அடமானம் இல்லாத கடன் (தனிநபர் கடன்), அடமானக் கடனைவிட (வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும்.
வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 80% வரை வாங்கலாம். ஆனால் இரண்டு கடனுக்கும் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாதமாவது இடைவெளி இருக்க வேண்டும்.

கடன் பெற தகுதி இல்லா நிலை: கடனை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியாமல், வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையோ தள்ளுபடி செய்திருக்கலாம்.

இதுபோன்ற சூழலில் சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றோ, செட்டில் செய்யப்பட்டது என்றோ வரும். அப்போது அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவர். அதன் பிறகு அவர்களால் அத்தியாவசியக் கடன் கூட பெற முடியாத நிலை ஏற்படும். அது அவர்களது வாரிசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கும்.

சிபில் ஸ்கோர் உயர வழிமுறைகள்: இ.எம்.ஐ.-யை செலுத்த கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே செலுத்தி விட வேண்டும். தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் நமது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்தபட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை மாத தவணையில் செலுத்தக் கூடாது.
அடமானமில்லாத கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும். அதிக கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் கோரி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் சிபில் ஸ்கோர் 800 வரை உயரும்.

இதுகுறித்து தனியார் வங்கி மேலாளர் கூறியது: வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் பெறப்பட்டாலும், சிபில் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால்தான் கடன் வழங்க பரிசீலனை செய்வோம். மேலும், வங்கிக் கணக்கில் தினந்தோறும் உள்ள இருப்புத்தொகையை ஒரு மாதத்துக்கு கணக்கிட்டு, 30ஆல் வகுத்து சராசரி பேலன்ஸ் கணக்கிடுவோம். அதுவும் கடன் வழங்குவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், எந்த வங்கியும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்காது.

இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தங்கள் சிபில் ஸ்கோரை உயர்த்திக் கொள்ள, வங்கியிலோ, நிதிநிறுவனங்களிலோ தங்க நகை கடன் பெற்று அதை முறையாக செலுத்தி தங்களது கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

தனியார் நிதிநிறுவன மேலாளர் தெரிவித்தது: பொதுவாக கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மாதத்தின் 20-ஆம் தேதியையொட்டி விண்ணப்பித்தால், அவர்களது விண்ணப்பம் பரிசீலனை வேகமாக நடைபெறும் வாய்ப்பு உண்டு. ஆவணங்கள் சரியாக இருப்பின் அந்த மாத இறுதிக்குள்ளாகவே கடன்தொகை வழங்கப்பட்டு விடும்.

தனியார் நிதி நிறுவனங்கள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகளவில் கடன்களை வழங்கும். தொழில் கடன் கேட்டு விண்ணப்பிப்போர் இத்தகைய காலங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார் அவர்.
- வை.இராமச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com