பணவீக்கம் 2.76 சதவீதமாக குறைவு

நாட்டின் பணவீக்கம் சென்ற ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக குறைந்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை


நாட்டின் பணவீக்கம் சென்ற ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்தவிற்பனை விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 10 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும். இதற்கு முன்பு, கடந்த 2018 மார்ச் மாதத்தில்தான் பொதுப் பணவீக்கம் மிகவும் குறைந்த அளவாக 2.74 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 3.02 சதவீதமாகவும், டிசம்பரில் 3.8 சதவீதமாகவும் காணப்பட்டன.
உருளைக்கிழங்கு, வெங்காயம், பழங்கள் மற்றும் பால் ஆகிய பொருள்களின் விலை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது ஜனவரியில் குறைவாக இருந்தது. இதன் காரணமாகவே அம்மாத்தில் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தது.
இருப்பினும், உணவு தொகுப்பில் அடங்கிய ஒட்டுமொத்த பொருள்களின் விலை முந்தைய டிசம்பரில் -0.07 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்த நிலையில் ஜனவரியில் 2.34 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது.
மேலும், 2018 டிசம்பரில் 8.38 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட எரிபொருள்களுக்கான பணவீக்கமானது ஜனவரியில் 1.85 சதவீதம் அளவுக்கு மிகவும் சரிந்திருந்தது. சர்க்கரை, ஆடை அணிகலன்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்ட போதிலும் உற்பத்தி துறை தொகுப்பில் உள்ள தயாரிப்புகளுக்கான பணவீக்கம் குறைந்தே காணப்பட்டது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் குறைந்ததன் எதிரொலியாக ரிசர்வ் வங்கி இம்மாதத்தில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்தது. 
இந்த நிலையில், பணவீக்கம் மேலும் குறைவது வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com