இடைக்கால பட்ஜெட் தொழில் துறையினரின் நிறைவேறாத கோரிக்கைகள்

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தாலும், அந்த நோக்கிலான அறிவிப்புகள் கூட எங்களுக்கு
இடைக்கால பட்ஜெட் தொழில் துறையினரின் நிறைவேறாத கோரிக்கைகள்

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தாலும், அந்த நோக்கிலான அறிவிப்புகள் கூட எங்களுக்கு அளிக்கப்படவில்லை என்கின்றனர் கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஜவுளித் தொழில் அமைப்புகள், குறு, சிறு தொழில்முனைவோருக்கான தொழில் அமைப்புகள்.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவை, திருப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த பாதிப்பில் இருந்து மீளாத நேரத்தில் அடுத்த தாக்குதலாக ஜி.எஸ்.டி. அமலானது. அதே நேரத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத அளவில் சரிந்தது. இந்த பாதிப்புகளில் இருந்து ஜவுளித் தொழில்முனைவோர் மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு கை கொடுத்து தூக்கிவிடும் நிலையில் இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

மேலும், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பூர் மாவட்டத்துக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி வர உள்ள நிலையில், கோவை மண்டலத்தை குறிப்பாக திருப்பூர் தொழில்முனைவோரையும், மக்களையும் கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் வகையிலேயே பட்ஜெட் அறிவிப்புகள் இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஜவுளித் தொழில் துறையினர் மட்டுமின்றி சிறு, குறு தொழில்முனைவோர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த எந்த ஒரு சலுகையும், அறிவிப்பும் பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறாதது அவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏற்கெனவே அறிவித்ததை வழங்கினாலே போதும்

செலுத்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறும் (ஆர்.ஓ.எஸ்.எல்.) திட்டம், ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கான ஒதுக்கீடு ஆகியவை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இருந்ததை விட குறைக்கப்பட்டிருப்பது எதிர்மறையான பாதிப்பையே ஏற்படுத்தும் என்கிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ப.நடராஜ்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டில் ரூ.3,664 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,164 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜவுளித் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது, தற்போது ரூ.700 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த ரூ.2,300 கோடியில் ரூ.633 கோடியை மட்டுமே அமைச்சகம் பயன்படுத்தியிருந்தது. ஏனெனில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளித் துறையின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் இப்போது ரூ.700 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை இடைக்காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதன் பிறகு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளாக நிதி வராததால் ஜவுளித் துறை இப்போது சிரமத்தில் உள்ளது. மேலும் நிலுவையில் உள்ள ரூ.6 ஆயிரம் கோடியையும் தேர்தலுக்கு முன்பே வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஜவுளித் துறையில் கூடுதல் முதலீடை அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், ஆலைகளின் நிதி நெருக்கடியை சரி செய்து கொடுத்தால்தான் ஆலைகள் மேற்கொண்டு முதலீடு செய்ய முடியும். அதேபோலவே, திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்த ரூ.1,300 கோடியையும், நிதியமைச்சகம் ஜவுளித் துறைக்கு வழங்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இடைக்கால பட்ஜெட்டின் மற்ற அம்சங்களை வரவேற்கிறோம். அதேநேரம், ஜவுளித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதை விட, ஏற்கெனவே அறிவித்தத் தொகையையாவது ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

பின்னலாடை வாரியம்

பின்னலாடைத் தொழிலுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் நிறைவேறாமல் போனது வருத்தமளிப்பதாகக் கூறுகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ஜி.எஸ்.டி.க்கு பிறகு பின்னலாடைத் துறை இக்கட்டான சூழலில், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் சுமார் ரூ.26 ஆயிரம் கோடியாக இருந்த ஏற்றுமதி, கடந்த 2017- 18 ஆம் நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடியாக சரிவடைந்துள்ளது. திருப்பூரில் பல பின்னலாடை நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான் வரிகளைத் திரும்பப் பெறும் டியூட்டி டிராபேக் சலுகையை பழையபடி வழங்குவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். அதேபோல் பின்னலாடைத் தொழிலுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்றும் எதிர்நோக்கியிருந்தோம். இந்த கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படாததுடன் ஜவுளித் துறை சார்ந்த அறிவிப்புகள் எதையுமே வெளியிடவில்லை.

பின்னலாடைத் துறை நாளுக்கு நாள் நலிவடையும் சூழலில் திருப்பூரில் இருந்து பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் முன்பெல்லாம் பார்க்கும் இடமெல்லாம் வேலைக்கு ஆள்கள் தேவை என்ற அறிவிப்புப் பலகைகள் இடம் பெற்றிருந்த கட்டடங்கள், தற்போது, இடம் வாடகைக்கு என்ற அறிவிப்புகளைத் தாங்கியே நிற்கின்றன.

சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

இதேபோலவே, கோவையில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய குறுந்தொழில் நிறுவனங்கள், ஜாப் ஆர்டர்கள் எனப்படும் கூலிக்கு வேலை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்கும் அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அதுபோன்ற எந்த அறிவிப்பும் வழங்கப்படாதது பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற சங்கங்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கண்டுகொள்ளப்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறியிருக்கிறார் கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுருளிவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com