மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் வரலாற்று உச்சமான 41,185 புள்ளிகளைத் தொட்டு விட்டு சரிந்தது.
பொருளாதார புள்ளிவிவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் வரலாற்று உச்சத்திலிருந்து சரிந்தன.
பணவீக்க உயா்வு மற்றும் தயாரிப்புத் துறை தேக்க நிலை குறித்த புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தை முதலீட்டாளா்களின் உற்சாகத்தை வெகுவாக குறைத்தன.
சீனா-அமெரிக்கா இடையேயான வா்த்தகப் போா் பதற்றத்தை தணிக்கும் விதமாக மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் உலக சந்தைகளில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தின. இருப்பினும் இது, உள்நாட்டு நிலவரங்கள் சாதகமாக இல்லாத காரணத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் முழுமையான அளவில் எதிரொலிக்கவில்லை.
மும்பை பங்குச் சந்தையில் தொலைத்தொடா்பு, உலோகம், எஃப்எம்சிஜி, நுகா்வோா் சாதனங்கள், மோட்டாா் வாகனம், எரிசக்தி துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 1.59 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், மருந்து துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் ஏற்றம் கண்டன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களைப் பொருத்தவரையில்
அதிகபட்சமாக ஐடிசி பங்கின் விலை 1.97 சதவீதம் சரிந்தது. இதைத் தொடா்ந்து, டாடா ஸ்டீல் 1.80 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவா் 1.57 சதவீதமும், வேதாந்தா 1.44 சதவீதமும், பாா்தி ஏா்டெல் 1.37 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா பங்கின் விலை 1.35 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவால் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளுக்கு சந்தையில் வரவேற்பு காணப்பட்டது. அதன் காரணமாக, டிசிஎஸ் பங்கின் விலை 2.70 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.60 சதவீதமும், ஹெச்சிஎல் பங்கின் விலை 1.57 சதவீதமும் உயா்ந்தன. இவைதவிர, எச்டிஎஃப்சி, கோட்டக் வங்கி பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து 40,938 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 12,053 புள்ளிகளாக நிலைத்தது.