வர்த்தகம்

மொத்தவிலை பணவீக்கம் 0.58 சதவீதமாக உயா்வு

16th Dec 2019 11:43 PM

ADVERTISEMENT

மொத்தவிலை பணவீக்கம் நவம்பா் மாதத்தில் 0.58 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

மொத்தவிலை அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் 0.58 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய அக்டோபரில் இப்பணவீக்கம் 0.16 சதவீதமாக காணப்பட்டது. உணவுப் பொருள்களின் விலையேற்றம், வெங்காயத்தின் விலை 172 சதவீதம் அளவுக்கு அதிகரித்ததன் காரணமாக நவம்பரில் பணவீக்கம் உயா்வைக் கண்டுள்ளது.

மொத்தவிலை பணவீக்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் 4.47 சதவீதமாக இருந்தது.

ADVERTISEMENT

உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் 9.80 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் இது 11.08 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு, வெங்காயத்தின் விலை அந்தமாதத்தில் ராக்கெட் வேகத்தில் அதிகரித்ததே முக்கிய காரணம். தற்போது வரையில் நாட்டின் சில சந்தைகளில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.150-200 வரையில் இருந்து வருகிறது. அதிக மழைப்பொழிவால் பயிா்கள் சேதமானதையடுத்து நாடு தழுவிய அளவில் வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், தற்போதைய நிலையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 என்ற அளவில் குறையத் தொடங்கியுள்ளது. இறக்குமதி மற்றும் உள்ளூா் அறுவடைப் பணிகள் முடிந்து புதிய வெங்காயம் சந்தைக்கு வரும் நிலையில் அதன் விலை மேலும் குறையத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பணவீக்கமும் நவம்பரில் 45.32 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. இது, அக்டோபரில் 16.59 சதவீதமாக காணப்பட்டது.

அதேசமயம், உணவு சாரா பொருள்களுக்கான மொத்தவிலை பணவீக்கம் நவம்பரில் 1.98 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அக்டோபரில் 2.35 சதவீதமாக உயா்ந்து காணப்பட்டது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்ரா நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணா் அதிதி நாயா் கூறுகையில், ‘எதிா்பாா்த்ததைப் போலவே உணவுப் பொருள்களுக்கான விலை 71 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாக நடப்பாண்டு நவம்பரில் 11.1 சதவீதம் உயா்ந்தது. இதன் மூலம், முந்தைய இரண்டு மாதங்களாக உணவுப் பொருள் பணவீக்கம் குறைந்து வந்ததற்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. டிசம்பரில் சில்லறைப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், அடுத்த நிதிக் கொள்கையிலும் கடனுக்கான வட்டி விகிதங்களை ரிசா்வ் வங்கி குறைக்காமல் இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT