வர்த்தகம்

மகாராஷ்டிர சந்தைக்கு இடம்பெயரும் ஈரோடு மஞ்சள் வியாபாரிகள்: விலை வீழ்ச்சியால் குறைந்துவரும் சாகுபடி

16th Dec 2019 02:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மஞ்சள் 150 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. ஆனால் விலை வீழ்ச்சியால் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி ஆர்வம் குறைந்து வருகிறது. வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதால், ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மகாராஷ்டிர மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
 உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 91%. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 80,000 டன் மஞ்சள் ஏற்றுமதியாகிறது. உள்ளூர் சந்தையில் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை விற்பனையாகும் மஞ்சள், உலக சந்தையில் ரூ.10,000 முதல் ரூ. 12,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35-40 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை 65 கிலோ). இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் சுமார் 2 லட்சம் மூட்டைகள் ஈரோடு சுற்று வட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவை.
 தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. அதில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சளில் "குர்குமின்' அளவு அதிகம். 3 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
 இருமுறை பாலிஷ் செய்ய முடியும். பொன் நிறம், மஞ்சள் நிறம், வெளிர் பொன் நிறம் உள்ளிட்ட அனைத்து நிற மஞ்சளும் ஈரோட்டில் கிடைக்கும் என்பதால் இந்திய மஞ்சள் சந்தை விலை நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் சந்தையாக ஈரோடு சந்தை இருந்தது.
 மகாராஷ்டிரத்தில் சாங்கிலி, பஸ்மத், நான்தேட், போக்கர், ஹிங்கோலி ஆகிய பகுதிகளிலும், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் நிஜாமாபாத், வாரங்கல், கடப்பா, மெட்டுபாலி, துக்கிராலா ஆகிய இடங்களிலும் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.
 குறைந்து வரும் மஞ்சள் சாகுபடி
 நாட்டிலேயே, ஆந்திரத்தை அடுத்து, மஞ்சள் விளைச்சலிலும் ஏலத்திலும் ஈரோடு இரண்டாம் இடத்தை வகித்து வந்தது. நீர்ப் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தமிழகத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.
 ஈரோடு மாவட்டத்தில் 2015-இல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016-இல் 2,966 ஹெக்டேராக குறைந்தது, 2017-இல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018-இல் 5,625 ஹெக்டேர், 2019-இல் 4,319 ஹெக்டேர் என குறைந்துவிட்டது.
 நடப்பு ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜூலை மாதம் நல்ல மழை பெய்து, பவானிசாகர் அணை நிரம்பி ஆகஸ்ட் மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் மஞ்சள் பயிரிட ஆர்வம் காட்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் விலை வீழ்ச்சி. கடந்த 5 ஆண்டுகளாக மஞ்சள் சராசரியாக குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரைதான் விலை போகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது மஞ்சள் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடிக்கு மாறிவிட்டனர்.
 மகாராஷ்டிரத்தில் அதிகரித்துவரும் மஞ்சள் சாகுபடி
 கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி, பஸ்மத், நான்தேட், போக்கர், ஹிங்கோலி ஆகிய பகுதிகளில் மஞ்சள் சாகுபடி சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவடைந்துள்ளது.
 இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள், கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் எம்.சத்தியமூர்த்தி கூறியதாவது:
 தமிழக மஞ்சள் புதுதில்லி, பஞ்சாப், கொல்கத்தா, மும்பை பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும், சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அந்த தேவையை தற்போது மகாராஷ்டிர, ஆந்திர மாநிலங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
 தெலங்கானா எல்லைப் பகுதியையொட்டிய மகாராஷ்டிர பகுதிகளான சாங்கிலி, பஸ்மத், நான்தேட், போக்கர், ஹிங்கோலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் மஞ்சள் சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் விவசாயத்துக்கான நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டதுதான். மகாராஷ்டிர மாநில விவசாயிகள் அந்த மண்ணில் விளையும் மஞ்சளை விதைக்கு வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வோர் ஆண்டும் ஈரோடு மாவட்டத்தில் இருந்துதான் விதை மஞ்சளை வாங்கிச் செல்கின்றனர். வேறு மண்ணில் இருந்து மஞ்சளை வாங்கிப் பயிரிடுவதால் தரமான மஞ்சள் கிடைக்கிறது.
 இப்போது மகாராஷ்டிரத்தில் விளையும் மஞ்சளிலும் குர்குமின் அளவு அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சீனா, மியான்மரில் இருந்து மஞ்சள் இறக்குமதி குறைந்து, இந்திய சந்தையை சமாளிக்கும் அளவுக்கு மகாராஷ்டிர, ஆந்திர மாநில மஞ்சள் வரத்து இருக்கிறது. ஈரோட்டில் மஞ்சள் விளைச்சல் இல்லாமல் போனாலும், உள்நாட்டில் மஞ்சள் தேவையை ஈடுகட்டுவதில் பிரச்னை எழப்போவதில்லை.
 இந்தியாவின் இரண்டாவது பெரிய மஞ்சள் சந்தை என்ற பெருமையைப் பெற்றிருந்த ஈரோடு மஞ்சள் சந்தை தன்னுடைய தனிப்பெரும் ஏகபோக நிலையைப் படிப்படியாக இழந்து வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மையான மஞ்சள் சந்தை நிஜாமாபாத் (ஆந்திரம்) என்ற நிலை மாறி மகாராஷ்டிர சந்தை முதல் இடத்துக்கு வந்துவிடும்.
 இப்போது தமிழகத்தில் அறியப்படாத மஞ்சள் சந்தைகளான சேலம், அரூர், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு, கோவை போன்ற இடங்களில் உள்ள சந்தைகளின் வரிசையில் ஈரோடும் சேரும் நிலை ஏற்படும்.
 ஈரோடு மஞ்சளின் கௌரவம் காப்பாற்றப்பட குர்குமின் அளவு அதிகம் உள்ள மஞ்சளை அதிகமாக விளைவிப்பது காலத்தின் கட்டாயம். இப்போது 3 முதல் 5% வரை உள்ள குர்குமின் அளவை 7 முதல் 10% அளவுக்கு அதிகரிக்கும் வகையிலான சாகுபடி நுட்பங்களைக் கையாள வேண்டும்.
 மேலும், இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் மஞ்சளுக்கு ஏற்றுமதி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்போது மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 6,000 கூட விலை கிடைக்காத நிலையில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.12,000 வரை விலை போகிறது. இந்த மஞ்சள் வெளிநாடுகளில் குவிண்டால் ரூ.20,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
 விலை சரிவால் சாகுபடி குறைந்து வருவதும், விலை உயரும் என்ற எண்ணத்தில் மஞ்சளை விவசாயிகள் இருப்பு வைப்பதாலும் கடந்த காலங்களில் ஆண்டுக்கு 6 மாதங்கள் வரை சுறுசுறுப்பாக இருந்த மஞ்சள் சந்தை, இப்போது 3 மாதங்கள் கூட சுறுசுறுப்பாக இயங்குவதில்லை. இதனால் ஈரோட்டில் உள்ள மஞ்சள் வியாபாரிகள் பலரும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்றார்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகள் கட்டாயம் தேவை
 கட்டுப்படியாகும் விலை கிடைக்காததால் கடந்த 10 ஆண்டுகளாகவே மஞ்சள் விவசாயம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் மஞ்சள் விவசாயம் அதிகரித்துள்ளதால், ஈரோடு மஞ்சளுக்கான வட இந்திய சந்தை, ஏற்றுமதிச் சந்தையை மகாராஷ்டிர மஞ்சள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாகவும் மஞ்சளுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது என்கின்றனர் விவசாயிகள்.
 இதுகுறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தெரிவித்ததாவது:
 ஏக்கருக்கு சாகுபடி செலவாக ரூ. 1.25 லட்சம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு அதிகபட்சம் 20 முதல் 25 குவிண்டால் வரைதான் மகசூல் கிடைக்கும். அந்த அடிப்படையில், மஞ்சள் குவிண்டால் ரூ. 7,000-க்கு குறைவாக விற்றால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான். ஆனால், இப்போது சராசரியாக ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரைதான் விலை கிடைக்கிறது.
 கட்டுப்படி விலை கிடைக்காததால்தான் விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைக்கின்றனர். இருப்பு வைக்கப்படும் மஞ்சள் பூச்சி தாக்குதலால் தரம் குறைந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க அரசு நேரடியாகவோ அல்லது தனியார் பங்களிப்பு மூலமாகவே குளிர்சாதன வசதி உள்ள மஞ்சள் சேமிப்புக் கிடங்குகளை ஈரோடு மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும், குளிர்சாதன மஞ்சள் சேமிப்பு கிடங்கு அமைக்க முன்வரும் தனியாருக்கு மின்சார மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.
 இதுபோல் மஞ்சளை ஆதாரமாக வைத்து ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அரசு அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்கான முன் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.
 இப்போது ஆந்திர மாநில அரசு மஞ்சள், பருத்தி, உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட 14 விளைபொருள்களுக்கு ஆதார விலையை அறிவித்துள்ளது. இதுபோல் தமிழக அரசு மஞ்சளுக்கு ஆதார விலையை அறிவிக்கவும், மஞ்சளை அரசே கொள்முதல் செய்யவும் வேண்டும்.
 மேலும், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு மஞ்சள் வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இப்போது கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நறுமணப் பொருள்கள் வாரியத்தின்கீழ் மஞ்சள் பயிர் வருகிறது. இந்த வாரியத்தின் கீழ் ஏராளமான விளைபொருள்கள் இருப்பதால் மஞ்சள் குறித்து இந்த வாரியம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதனால், மஞ்சளுக்கென தனியாக வாரியத்தை ஈரோட்டில் அமைக்க, மத்திய அரசை தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT


 
 - கே. விஜயபாஸ்கர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT