வர்த்தகம்

சென்செக்ஸ்: "தடை' தாண்டுமா? தள்ளாடுமா?

16th Dec 2019 02:00 AM

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் கடந்த பல மாதங்களாக தள்ளாட்டம் தொற்றிக் கொண்டிருந்ததை அனைவரும் அறிவர். இதனால், பங்குச் சந்தை மேலும் அதல பாதாளத்துக்கு சென்றுவிடுமோ என்ற அச்சம் சந்தையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கி இருந்தது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித் துறையில் கார்ப்பரேட் வரியை 23 சதவீதமாகக் குறைத்தது உள்பட பல்வேறு உத்வேக நடவடிக்கைகளை எடுத்தார். மேலும், பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சில நாள்களாக பங்குச் சந்தையில் காளையின் பாய்ச்சலுக்கு உதவியுள்ளது.
 இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 41,163.79 வரை உயர்ந்து புதிய உச்சத்தை கடந்து நவம்பர் 28 அன்று பதிவு செய்தது. அதுவே வரலாற்றுச் சாதனை அளவாகவும் இப்போது உள்ளது. இதன் 52 வார குறைந்தபட்சம் 35,010.82 புள்ளிகளாக கடந்த 26-12.2018-இல் பதிவாகியுள்ளது. மேலும், வரலாற்று குறைந்தபட்ச அளவு 947.14 புள்ளிகளாகும். இது 1991, ஜனவரி 25-இல் பதிவாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் கடந்த மாதத்தில் 12,158.80 வரை உயர்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. இதன் 52 வார குறைந்தபட்சம் 10,534.55 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
 இந்நிலையில், நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆட்டோ தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், உள்நாட்டுத் தரவுகள் பங்குச் சந்தைக்கு ஆரோக்கியமான சூழலில் இல்லாவிட்டாலும், சர்வதேச தரவுகள் ஓரளவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் நிதியமைச்சரின் சலுகை அறிவிப்புகள் பங்குச் சந்தைக்கு "ஊக்க டானிக்'காக அமைந்தது. ஆனால், டிசம்பர் தொடக்கத்தில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலை, பணவீக்கம் உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தையில் காளையின் பாய்ச்சலில் தொய்வு ஏற்பட்டது.
 ஆனால், சந்தை கரடியின் முழுப் பிடிக்குள் செல்லவிடாமல் காளை உத்வேகத்துடன் போராடியது. இதனால், கடந்த வாரம் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 1 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தற்போது சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் முறையே 41.009.71 மற்றும் 12086.70 என நிலைபெற்றுள்ளது. இவை இரண்டும் ஏற்கெனவே பதிவு செய்த உச்சத்தைத் தாண்டுவதற்கு இன்னும் முறையே 154, 72 புள்ளிகள்தான் தேவையாக உள்ளன. இந்நிலையில், சென்செக்ஸ் "தடை' தாண்டுமா? அல்லது தள்ளாட்டத்தில் இருக்குமா? என்பதுதான் சந்தையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 இந்நிலையில், வரலாற்று தரவுகள் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்தால், சந்தையின் போக்கை ஓரளவுக்கு கணிக்க முடியும். டிசம்பர் மாதத்தைப் பொருத்தமட்டில், கடந்த 11 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் காளையின் ஆதிக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது. சென்செக்ஸ் கடந்த 2011-இல் அதிகபட்சமாக 6 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு அடுத்து 2014-இல் 3.7 சதவீதமும், 2018-இல் 0.48 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளது. அதே சமயம், கடந்த 11 ஆண்டுகளில் 2008 டிசம்பரில் மட்டும் 9 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல, 2017-இல் 3.7 சதவீதமும், 2010-இல் 3.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.
 இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவு கடந்த வாரம் வெளியானது. இது சந்தைக்கு சாதகமாக அமையவில்லை. இதைத் தொடர்ந்து சீனா-அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் குறித்த தகவலுக்காக பங்குச் சந்தை காத்திருந்தது. இந்நிலையில், சீனாவின் பொருள்களுக்கான கூடுதல் வரி விதிப்பை நிறுத்திவைப்பதற்காக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதனால், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்கா - சீனா இடையே நிலவி வந்த வர்த்தகப் போர் பதற்ற நிலை மிகவும் தணிந்துவிட்டதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இது நிதி சந்தைக்கு குறிப்பாக பங்குச்சந்தைக்கு சாதகமானதாக இருக்கும் என நம்பப்பபடுகிறது. மேலும், சர்வதேச பொருளாதார தரவுகள் ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்கெனவே பதிவு செய்துள்ள உச்ச அளவைத் தாண்டி மேலே செல்லும் என்று சந்தை வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. இது சாத்தியமாகும் பட்சத்தில் நிஃப்டி 12,500-க்கும், சென்செக்ஸ் 41,750-க்கும் உயரும் என பங்குச் சந்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.
 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், பொது பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கலாகவுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு உத்வேக நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும் என்று பேசப்படுகிறது. இதனால், பங்குச் சந்தையில் "பட்ஜெட்டுக்கு முந்தைய ஏற்றம்' வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரம் கருதுகிறது. அதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் வரும் நாள்களில் புதிய உச்சத்தை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 சென்செக்ஸ் தடை தாண்டுமா? தள்ளாடுமா...? பொருத்திருந்து பார்ப்போம்...!


 -மல்லி எம்.சடகோபன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT