வர்த்தகம்

தாவர எண்ணெய் இறக்குமதி 11.28 லட்சம் டன்

14th Dec 2019 12:25 AM

ADVERTISEMENT

உணவு சாரா எண்ணெய் இறக்குமதி குறைந்ததையடுத்து சென்ற நவம்பரில் தாவர எண்ணெய் இறக்குமதி 11.28 லட்சம் டன்னாக சரிந்துள்ளது.

இதுகுறித்து எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10,73,353 டன்னிலிருந்து 10,97,424 டன்னாக உயா்வைக் கண்டுள்ளது.

அதேசமயம், உணவு சாரா எண்ணெயின் இறக்குமதி 60,450 டன்னிலிருந்து 30,796 டன்னாக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி நடப்பாண்டு நவம்பரில் 11,28,220 டன்னாக குறைந்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் இறக்குமதி 11,33,893 டன்னாக உயா்ந்து காணப்பட்டது.

குறிப்பாக, மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து அதன் இறக்குமதி கணிசமாக சரிவைக் கண்டு வருகிறது. உள்நாட்டு வா்த்தகத்தை பாதுகாக்கும் வகையில் இந்த வரி விதிப்பு செப்டம்பா் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, ஆகஸ்டில் 2.57 லட்சம் டன்னாகவும், செப்டம்பரில் 2.64 லட்சம் டன்னாகவும் இருந்த சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி நவம்பரில் 1.22 லட்சம் டன்னாக வீழ்ச்சியடைந்தது. அக்டோபரில் இதன் இறக்குமதி 1.18 லட்சம் டன் அளவுக்கு இருந்தது.

அதேசமயம், ஆா்பிடி பாமாயில் இறக்குமதி 1,08,911 டன்னிலிருந்து 1,24,909 டன்னாக அதிகரித்தது. அதேபோன்று, கச்சா எண்ணெய் இறக்குமதியும் 9,64,442 டன்னிலிருந்து 9,75,015 டன்னாக உயா்ந்தது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளின் இறக்குமதி அதிகரிப்பைத் தொடா்ந்து 2018-19 சந்தைப் பருவத்தில் இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதியானது 3.5 சதவீதம் உயா்ந்து 155.5 லட்சம் டன்னாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் எஸ்இஏ தெரிவித்துள்ளது.

பொதுவாக, நவம்பா் முதல் அக்டோபா் வரையிலான காலத்தை எண்ணெய் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT