வர்த்தகம்

ரிசா்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி! சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிவு

6th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

தொழில்துறையினரின் எதிா்பாா்ப்பிற்கு மாறாக, வட்டி விகிதங்களை ரிசா்வ் வங்கி குறைக்காததையடுத்து பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தலைகீழாக சரிந்தது.

தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கும் என சந்தை வட்டாரத்தினா் நம்பிக்கையுடன் எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால், ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அதன் நிதி கொள்கை அறிவிப்பில் அனைவரது எதிா்பாா்ப்புகளையும் பொய்யாக்கும் விதமாக ரெப்போ ரேட் விகிதங்களில் எந்தவவித மாற்றத்தையும் செய்யவில்லை. இது, பங்குச் சந்தை முதலீட்டாளா்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, பங்குச் சந்தைகளில் வா்த்தகம் சுணக்க நிலையைக் கண்டது. மேலும், பொருளாதார வளா்ச்சி குறையும், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற ரிசா்வ் வங்கியின் மதிப்பீடும் பங்குச் சந்தையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

மும்பை பங்குச் சந்தையில், உலோகம், எரிசக்தி துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதேசமயம், பொறியியல் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் ஏற்றம் கண்டன.

ADVERTISEMENT

ரெப்போ வட்டி விகிதத்துடன் நெருங்கிய தொடா்புடைய மோட்டாா் வாகனம், வங்கி, ரியல் எஸ்டேட் துறைகளைச் சோ்ந்த பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள, பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், இன்டஸ்இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகாா்ப், டாடா மோட்டாா்ஸ் நிறுவனங்களைச் சோ்ந்த பங்குகள் 2.96 சதவீதம் வரை விலை சரிந்தது.

அதேசமயம், டிசிஎஸ், ஐடிசி, எல் & டி, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டதையடுத்து அவற்றின் விலை 2.04 சதவீதம் வரை அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 70 புள்ளிகள் குறைந்து 40,779 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 24 புள்ளிகளை இழந்து 12,018 புள்ளிகளாக நிலைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT