ஊக்குவிப்பு சலுகை கிடைக்காது என்ற நிலைப்பாட்டால் சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி

மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு மத்திய அரசு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்காது என்ற நிலைப்பாட்டால் பங்குச் சந்தையில்
ஊக்குவிப்பு சலுகை கிடைக்காது என்ற நிலைப்பாட்டால் சென்செக்ஸ் 587 புள்ளிகள் வீழ்ச்சி


மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு மத்திய அரசு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்காது என்ற நிலைப்பாட்டால் பங்குச் சந்தையில்  வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் 587 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்சியொன்றில் பேசுகையில், வரி செலுத்துவோரின் பணத்தை நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக பயன்படுத்துவது தார்மிக ஆபத்துகளை உருவாக்கும் என்பதுடன், சந்தைப் பொருளாதாரத்துக்கு எதிரானதாகவும் அமையும் என்றார்.
இதனிடையே மத்திய மின்துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க் பேசிய போது, குறைந்த வட்டி விகிதம் கடன் வசதியை அதிக அளவில் ஏற்படுத்தித் தருவது தனியார் துறையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த ஊக்குவிப்பு திட்டங்களாக அமையும் என்றார்.
முக்கிய பொறுப்புகளை வகிக்கும் இவர்களது கருத்து, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நுகர்வோர் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் மத்திய அரசு சலுகைத் திட்டங்களை அறிவிக்கும் விதத்தில் இல்லை என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 26 காசுகள் சரிந்து 71.81 ஆனது. அந்நிய முதலீட்டு வரத்து குறைவு, கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட ஏற்ற இறக்கம் உள்ளிட்டவையும் பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு மேலும் வழிவகுத்தன.
வளர்ச்சியை  ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சலுகைகளை அறிவிக்க வாய்ப்பில்லை என்ற நிலைப்பாடு உருவானதையடுத்து, வங்கி, மோட்டார் வாகனம், உலோகத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர்.
அதிகபட்சமாக யெஸ் வங்கி பங்கின் விலை 13.91 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடர்ந்து, வேதாந்தா, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலை 7.76 சதவீதம் வரை சரிந்தன.
ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்யுஎல், ஹெச்சிஎல் பங்குகளுக்கு சந்தையில் ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டதையடுத்து அவற்றின் விலை 1.57 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 587 புள்ளிகள் (-1.59%) வீழ்ச்சி கண்டு 36,472 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 177 புள்ளிகள் (-1.62%) சரிந்து 10,741 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com