பயணிகள் வாகன உற்பத்தி 13 சதவீதம் சரிவு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் பயணிகள் வாகன உற்பத்தி 13.18 சதவீதம் சரிவடைந்துள்ளது.
பயணிகள் வாகன உற்பத்தி 13 சதவீதம் சரிவு


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் பயணிகள் வாகன உற்பத்தி 13.18 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, டெயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய அளவில் உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டதையடுத்து நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால அளவில் பயணிகள் வாகன உற்பத்தி 13.18 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது.
அதன்படி, மதிப்பீட்டு காலத்தில் மொத்த பயணிகள் வாகன உற்பத்தி 13,97,704-லிருந்து 12,13,281-ஆக குறைந்துள்ளது.
சந்தையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியாவின் வாகன உற்பத்தி 18.06 சதவீதம் சரிந்து 5,32,979-ஆக இருந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி 10.65 சதவீதம் குறைந்து 80,679-ஆகவும், 
ஃபோர்டு உற்பத்தி 25.11 சதவீதம் வீழ்ச்சியடைந்து 71,348-ஆகவும், டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி 20.37 சதவீதம் சரிந்து 59,667-ஆகவும் இருந்தது. 
ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் வாகன உற்பத்தி 18.66 சதவீதம் குறைந்து 47,043-ஆகவும், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உற்பத்தி 20.98 சதவீதம் சரிந்து 45,491-ஆகவும் இருந்தது.
கணக்கீட்டு காலத்தில் ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் வாகன உற்பத்தி 1.77 சதவீதம் உயர்ந்து 2,39,671 என்ற அளவில் இருந்தது. அதேபோன்று, போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தியும் 1.05 சதவீதம் அதிகரித்து 36,929-ஆக காணப்பட்டது.
இருசக்கர வாகன பிரிவைப் பொருத்தவரையில் அதன் மொத்த உற்பத்தி ஏப்ரல்-ஜூலை காலத்தில் 9.96 சதவீதம் குறைந்து 78,45,675-ஆக இருந்தது.
சந்தையில் முதலிடம் வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உற்பத்தி 12.03 சதவீதம் குறைந்து 24,66,802-ஆக காணப்பட்டது. அதேபோன்று, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் வாகன உற்பத்தி 18.5 சதவீதம் குறைந்து 19,44,900-ஆகவும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உற்பத்தி 8.07 சதவீதம் சரிந்து 11,54,670-ஆகவும் இருந்தது. 
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன உற்பத்தி 4.47 சதவீதம் அதிகரித்து 13,89,396-ஆகவும், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் உற்பத்தி 24.51 சதவீதம் உயர்ந்து 2,83,291-ஆகவும் இருந்தது என அந்த புள்ளிவிவரத்தில் எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நிறுவனங்கள் வாகன உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் இதுவரையில் 15,000 பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடர்ந்தால் ஏறத்தாழ 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழ்நிலை உள்ளதாக உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான அக்மா (ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com